கோனூரில் சீராக குடிநீர் வழங்க வேண்டும் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு


கோனூரில் சீராக குடிநீர் வழங்க வேண்டும் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 11 Feb 2019 10:15 PM GMT (Updated: 11 Feb 2019 5:38 PM GMT)

கோனூரில் சீராக குடிநீர் வழங்கக்கோரி அப்பகுதி பொதுமக்கள் நேற்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

நாமக்கல், 

கந்தம்பாளையம் அருகே உள்ள கோனூரை சேர்ந்த பொதுமக்கள் நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:-

கோனூரில் சுமார் 2 ஆயிரம் பேர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு காவிரி குடிநீர் ஒருநாள் விட்டு ஒருநாள் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 2 மாதங்களாக பைப்-லைன் உடைந்து விட்டது என கூறி காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. எனவே ஒரு குடம் ரூ.5-க்கு விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகிறோம். கூலி தொழில் செய்து வரும் எங்களால் குடிநீரை விலைக்கு வாங்க முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. எனவே எங்கள் பகுதிக்கு சீராக குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இதேபோல் உப்பு தண்ணீரும் ஆழ்துளை கிணறுகளில் இருந்து வீதிகளில் உள்ள குழாய் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது ஆழ்துளை கிணறு வறண்டு விட்டதாக கூறி, எங்கள் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டிகளுக்கு அடியில் குழாய் அமைத்து உப்பு தண்ணீர் வினியோகம் செய்ய முயன்று வருகின்றனர்.

இதனால் நாங்கள் உப்பு தண்ணீர் பிடிக்க ஏறத்தாழ 1 கி.மீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். எனவே பழைய முறைப்படி வீதிகளில் உள்ள குழாய்கள் மூலம் உப்பு தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story