காட்பாடி அருகே 5 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் 5 வாலிபர்கள் கைது
காட்பாடி அருகே ஆந்திராவில் இருந்து மினி கன்டெய்னர் லாரியில் கடத்தி வந்த 2 டன் செம்மரக்கட்டைகள் மற்றும் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3 டன் செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 5 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
காட்பாடி,
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வேலூர் மாவட்ட தனிப்படை போலீசார் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் காட்பாடியை அடுத்த கரசமங்கலம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில், அவர் கரசமங்கலம் முஸ்லிம் காலனியை சேர்ந்த அமானுல்லா (வயது 32) என்பதும், இவர் ஏற்கனவே செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டதும் தெரிய வந்தது.
தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி கொண்டிருந்தபோது அந்த வழியாக மினி கன்டெய்னர் லாரி ஒன்று வந்தது. அதனை நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில், ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 2 டன் செம்மரக்கட்டைகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் லாரியில் இருந்த 2 பேர் மற்றும் அமானுல்லாவை லத்தேரி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில், அமானுல்லாவின் வீட்டில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன் தலைமையில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். வீட்டில் 3 டன் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து லத்தேரி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
அதைத்தொடர்ந்து செம்மரக்கட்டை கடத்தியது மற்றும் பதுக்கி வைத்ததாக அமானுல்லா, கரசமங்கலத்தை சேர்ந்த மெகபூக்ஷா (20), பைரோஸ் (21), ஜோதீஸ் (25), குடியாத்தம் தரணம்பேட்டையை சேர்ந்த அஸ்லாம் (28) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்றும், ஆந்திராவில் இருந்து செம்மரக்கட்டைகள் கடத்தி வருவது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட மற்றும் பதுக்கி வைக்கப்பட்ட செம்மரக்கட்டைகளை போலீசார் மற்றும் வனத்துறையினர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.1 கோடி என கூறப்படுகிறது. செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் 5 வாலிபர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் காட்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story