காசநோய் கருவி மற்றும் எச்.ஐ.வி. பரிசோதனை வாகனம் கலெக்டர் பா.பொன்னையா கொடியசைத்து தொடங்கினார்


காசநோய் கருவி மற்றும் எச்.ஐ.வி. பரிசோதனை வாகனம் கலெக்டர் பா.பொன்னையா கொடியசைத்து தொடங்கினார்
x
தினத்தந்தி 12 Feb 2019 4:30 AM IST (Updated: 12 Feb 2019 1:01 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடமாடும் காசநோய் கண்டறியும் கருவிகள் கொண்ட வாகனத்தை மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

காஞ்சீபுரம்,

மைக்கோ பாக்டீரியம் டியூபர்குளோசிஸ் என்னும் நுண்ணுயிர் கிருமியினால் உண்டாகும் காசநோய் என்பது காற்றின் மூலம் பரவக்கூடிய கொடிய நோய் ஆகும். உலகின் காசநோயாளிகளில் நான்கில் ஒரு பங்கு நோயாளிகள் இந்தியாவில் உள்ளனர். குழந்தைகள் முதல் முதியவர் வரை பாதிக்கின்ற இந்த நோயினை 2025-க்குள் ஒழிப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நேற்று காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அதிநவீன காசநோய் கண்டறியும் கருவி கொண்ட வாகனத்தையும், எச்.ஐ.வி. பரிசோதனை வாகனத்தையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மருத்துவ குழுவுடன் செல்லும் இந்த வாகனம் நேற்று 11-ந் தேதி முதல் வரும் 16-ந் தேதி வரை காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு காசநோய் மற்றும் எச்.ஐ.வி. தொற்று உள்ளவர்களை கண்டறிய உள்ளது.

இன்று 12-ந் தேதி பல்நெல்லூர், மாம்பாக்கம், கொல்லசேரி, தர்காஸ், 13-ந் தேதி திரிசூலம், பல்லாவரம், திருநீர்மலை, 14-ந் தேதி ரெட்டிப்பாளையம், ராயமங்களம், முள்ளிப்பாக்கம், 15-ந் தேதி சட்ராஸ், செய்யூர், சூணாம்பேடு, 16-ந் தேதி காந்திநகர், செம்பூண்டி, பெரும்பாக்கம், ஆதவபாக்கம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும்.

எச்.ஐ.வி., காசநோய் மற்றும் எதிர்ப்புத் தன்மை ஆகியவற்றை குறைந்த நேரத்தில் கண்டறிந்து சிகிச்சைக்கு இந்த நடமாடும் மருத்துவ குழுவை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் காசநோய் மையத்தில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன காசநோய் கண்டறியும் கருவியை, மாவட்ட கலெக்டர், காஞ்சீபுரம் மாவட்ட சுகாதார இணை இயக்குநர் ஜீவா அவர்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி என்.சுந்தரமூர்த்தி, துணை இயக்குநர் மருத்துவ பணிகள் செந்தில்குமார் மற்றும் டாக்டர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story