கோவை கலெக்டர் அலுவலகம் முன் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்


கோவை கலெக்டர் அலுவலகம் முன் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Feb 2019 11:30 PM GMT (Updated: 11 Feb 2019 8:40 PM GMT)

காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது வாழ்த்து அட்டைகளை எரிக்க முயன்றனர்.

கோவை, 

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற் றது. இதற்கு மாவட்ட திட்ட வளர்ச்சி அதிகாரி ரூபன் சங்கர் ராஜா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இந்து பாரத் சேனா அமைப்பின் மாவட்ட தலைவர் பாண்டி தலைமையில் வந்தவர்கள், காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டபடி வாழ்த்து அட்டைகளை எரிக்க முயன்றனர். உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் இருந்த வாழ்த்து அட்டைகளை பறித்தனர். இதனால் இந்து பாரத் சேனா அமைப்பினர் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள், கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், நமது பண்பாடு மற்றும் கலாசாரத்தை சீரழிக்கும் வகையில் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர் தினத்தன்று பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காதலர்கள் அத்துமீறலில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. எனவே காதலர் தின கொண்டாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும். கோவையில் குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு கோவை ஆர்.எஸ்.புரத்தில் நினைவு தூண் வைக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

கோவை கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் அளித்த மனுவில், கோவையை அடுத்த சூலூர் வாகராயம்பாளையத்தில் 1999-ம் ஆண்டு வாகை விவேகானந்தர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் தொடங்கப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டு முதல் இந்த சங்கத்தை காணவில்லை. இந்த சங்க கட்டிடம் எங்கு இயங்குகிறது என்று தெரியவில்லை. எனவே காணாமல் போன நெசவாளர் சங்கத்தினை கண்டுபிடித்து தரவேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

இந்து முன்னணி கோவை வடக்கு மாவட்ட நகர செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில், கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள ஜெப கூடத்தில் வருகிற 18-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை கருத்தரங்கு நடக்க உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட நோட்டீசில் இந்துக்களின் வழிபாட்டு முறைகளை கொச்சைப்படுத்தும் வாசகங்கள் இடம் பெற்று உள்ளன. எனவே அதற்கு ஏற்பாடு செய்தவர்கள் மீது வழக்குப்பதிந்து கைதுசெய்ய வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

சிங்காநல்லூர் பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி இறந்த பாண்டித்துரை என்பவரின் மனைவி கீர்த்தனா அளித்த மனுவில், எனது கணவர் கடந்த மாதம் 22-ந் தேதி சிங்காநல்லூர் ஹவுசிங் யூனிட் பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி இறந்தார்.

இதனால் எனது குடும்பத்துக்கு வருமானம் இல்லாததால் வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை. எனவே எனக்கு கருணை அடிப்படையில் குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு ஒதுக்கீடு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

Next Story