வல்லப கணபதி, சின்னடைக்கி அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்


வல்லப கணபதி, சின்னடைக்கி அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 11 Feb 2019 10:30 PM GMT (Updated: 11 Feb 2019 8:50 PM GMT)

அன்னவாசல், பொன்னமராவதி, ஆவூரில் உள்ள வல்லப கணபதி, சின்னடைக்கி அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

அன்னவாசல், 

அன்னவாசல், புலவன்பட்டியில் வல்லப கணபதி கோவில் உள்ளது. இக்கோவிலில் வல்லப கணபதி மூலஸ்தான விமானம், மண்டபம் ஆகியவற்றிற்கு திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் விழா தொடங்கியது. தொடர்ந்து அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, நவக்கிரஹ ஹோமம், லட்சுமி ஹோமம் நடைபெற்றது. பின்னர் 1, 2 மற்றும் 3-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கொண்டு கோவிலை வலம் வந்தனர்.

இதனைத்தொடர்ந்து வல்லப கணபதி மூலஸ்தான விமான கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை புலவன்பட்டி கிராம மக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அன்னவாசல் போலீசார் செய்திருந்தனர்.

இதேபோன்று அன்னவாசல் பகுதிகளில் உள்ள சோலசேரிப்பட்டி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பொன்னமராவதி

பொன்னமராவதி, தூத்தூர் ஊராட்சி தீத்தான்பட்டியில் சின்னடைக்கி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நொண்டிக்கருப்பர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் சன்னதிகளும் உள்ளன. கோவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் விழா தொடங்கியது. இதையொட்டி யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை 9.30 மணிக்கு சின்னடைக்கி அம்மன் கோவில் மூலஸ்தான விமான கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை தீத்தான்பட்டி ஊர் பொதுமக்கள் மற்றும் பங்காளிகள் செய்திருந்தனர்.

ஆவூர்

விராலிமலை ஒன்றியம், ஆவூர் அருகே உள்ள மருதம்பட்டியில் வலம்புரி விநாயகர், நாகர் ஆகிய சாமிகளுக்கு ஊர்பொதுமக்கள் சார்பில் புதிதாக கோவில் கட்ட முடிவு செய்தனர். இதையடுத்து திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் விழா தொடங்கியது. தொடர்ந்து 1, 2-ம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து யாக சாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கொண்டு கோவிலை வலம் வந்தனர். பின்னர் விநாயகர், நாகர் மூலஸ்தான விமான கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் புனிதநீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

திரளான பக்தர்கள் தரிசனம்

தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தில் புதுக்கோட்டை பிரகதம்பாள்தாஸ் ராஜா ராஜகோபால தொண்டைமான் மற்றும் கீரனூர், இலுப்பூர், திருச்சி, புதுக்கோட்டை, பாக்குடி, மாங்குடி, மலம்பட்டி, ஆவூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மருதம்பட்டி கிராம பொதுமக்கள் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர். 

Next Story