கோத்தகிரி நேரு பூங்காவில், கோடை சீசனுக்காக 30 ஆயிரம் மலர் நாற்று நடும் பணி மும்முரம்


கோத்தகிரி நேரு பூங்காவில், கோடை சீசனுக்காக 30 ஆயிரம் மலர் நாற்று நடும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 13 Feb 2019 4:15 AM IST (Updated: 12 Feb 2019 11:25 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி நேரு பூங்காவில் கோடை சீசனையொட்டி 30 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கோத்தகிரி,

கோத்தகிரி நகரில் பேரூராட்சி சார்பில் நேரு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் மலர்த்தோட்டம், அழகிய புல்தரை, ரோஜா பூங்கா மற்றும் சிறுவர் விளையாட்டு பூங்கா ஆகியவைகளுடன் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் அமைத்துள்ளது. இந்த பூங்காவை பேரூராட்சி நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

நேரு பூங்காவை ஒட்டி புகழ்பெற்ற காந்தி மைதானமும், பூங்கா வளாகத்திலேயே ஆதிவாசி இன மக்களான கோத்தர் இன மக்களின் பழமையான அய்யனார் அம்மனோர் கோவில் அமைந்துள்ளது.

நேரு பூங்காவிற்கு ஆண்டு முழுவதும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் வந்து பூங்காவை கண்டு களித்து செல்கின்றனர். எனவே நேரு பூங்கா கோத்தகிரி பகுதியில் முக்கிய சுற்றுலா தலமாக விளங்குவதுடன், குழந்தைகளின் பொழுதுபோக்கு அம்சமாக திகழ்கிறது.

நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் தோட்டக்கலைத்துறை சார்பில் கோடை விழா மாவட்டம் முழுவதும் அனைத்து சுற்றுலா தலங்களிலும் ஒரு மாத காலத்திற்கு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில் 2 நாட்கள் காய்கறி கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக மாநிலம் முழுவதிலும் இருந்து பல்வேறு மாவட்டங்கள் பங்கேற்று சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் காய்கறிகளை கொண்டு சிற்பங்களை அமைக்க உள்ளனர்.

நேரு பூங்கா மற்றும் காய்கறி கண்காட்சியை கண்டு களிக்க ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவதை முன்னிட்டு பூங்காவை கோடை சீசனுக்குள் தயார் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதற்கான பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதையொட்டி பூங்காவில் தரையில் வளர்ந்துள்ள புல்களை எந்திரங்கள் மூலம் வெட்டி சமன் செய்து பசுமையாக மாற்ற ஸ்ப்ரிங்ளர் மூலம் தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது. ரோஜா பூங்காவில் உள்ள ரோஜா மலர் செடிகளுக்கு கவாத்து செய்யப்பட்டு உள்ளது.

மேலும் கோடை சீசனுக்காக பல்வேறு ரகங்களை சேர்ந்த 30 ஆயிரம் மலர் நாற்றுகள் பூங்காவிற்கு கொண்டுவரப்பட்டு உள்ளது. மலர் நாற்றுகளை நடவு செய்வதற்காக மண்ணை பதப்படுத்தி, மண்ணுடன் இயற்கை உரத்தை கலந்து மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த பணிகள் அனைத்தும் ஒரு வார காலத்திற்குள் முடிவடைந்து வரும் மார்ச் மாத தொடக்கத்தில் மலர்கள் பூத்து குலுங்குவதுடன், காய்கறி கண்காட்சிக்கு பூங்கா தயாராகி விடும் என பூங்கா ஊழியர்கள் தெரிவித்தனர்.

Next Story