மாவட்ட செய்திகள்

அடிப்படை வசதியில்லாத சிவகாசி பஸ் நிலையம் + "||" + Sivakasi bus station without basic facilities

அடிப்படை வசதியில்லாத சிவகாசி பஸ் நிலையம்

அடிப்படை வசதியில்லாத சிவகாசி பஸ் நிலையம்
சிவகாசி பஸ் நிலையத்தில் அடிப்படை வசதி செய்து தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிவகாசி,

சிவகாசி நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பஸ் நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலையம் 40 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இங்கு தினமும் 250 பஸ்கள் வந்து செல்கிறது. சென்னை, பெங்களூரு, திருச்சி, கோவை, சேலம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு இங்கிருந்து பஸ்கள் இயங்கப்பட்டு வருகிறது.


தினமும் 3 ஆயிரம் பயணிகள் சிவகாசி பஸ் நிலையத்துக்கு வந்து செல்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. போதிய இட வசதி இல்லாததால் கடந்த 7 வருட போராட்டத்துக்கு பின்னர் சிவகாசி பஸ் நிலைய விரிவாக்க பணி கடந்த ஆண்டு முடிந்தது. ஆனால் பஸ் நிலையம் இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர வில்லை. இதற்கிடையில் பஸ் நிலையத்தின் ஒரு பகுதியில் செயல்பட்டு வந்த கடைகளை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் நகராட்சி அதிகாரிகள் அகற்றினர். அதில் கடை வைத்து இருந்தவர்களுக்கு வேறு கடைகள் ஒதுக்கப்படும் என்று அப்போது கூறப்பட்டது. இதை நம்பி கடைக்காரர்களும் கடைகளை அகற்ற ஒப்புக்கொண்டனர். இந்த நிலையில் கடைகளை அகற்றிய 10 மாதங்களுக்கு பின்னரும் அந்த இடத்தில் புதிய கடைகள் கட்ட எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை.

அதேபோல் 3 ஆயிரம் பேர் வந்து செல்லும் சிவகாசி பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு தேவையான இருக்கைகள் இல்லை. மேலும் குடிநீர் வசதி, இலவச கழிப்பிட வசதி எதுவும் இல்லை. கட்டண கழிப்பிடம் மட்டும் உள்ளது. இந்த கழிப்பிடத்தில் எப்போதும் பயணிகளின் கூட்டம் அதிகஅளவில் இருக்கிறது. இதனால் பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகிறார்கள். பலர் திறந்த வெளி பகுதியிலும், பஸ் நிலைய விரிவாக்க பகுதிகளையும் பயன்படுத்தி வருகிறார்கள்.

காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி முடிந்து வீடு திரும்பும் மாணவர்கள் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் போது அவர்கள் அமர போதிய இடவசதி இல்லை. அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத நிலையில் கடந்த 3 மாதமாக கட்டிட பணி நடந்து வருகிறது. இந்த கட்டிடப்பணிக்காக அமைக்கப்பட்ட பலகைகள் அங்கிருந்து அகற்றப்படாமல் இருக்கிறது. இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் தரையில் அமரக் கூட போதிய இடம் இல்லாமல் பஸ்கள் வரும் பாதையில் உள்ள திண்டுகளில் அமர வேண்டிய நிலை உள்ளது.

பஸ் நிலையத்தில் இருந்த உயர்கோபுர மின் விளக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அகற்றப்பட்டது. அதன் பின்னர் அந்த விளக்கு பொருத்தப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் பஸ் நிலையம் இருட்டில் தவிக்கிறது. இதனால் குற்றச்சம்பவங்களும் நடைபெற வாய்ப்பு உள்ளது. பஸ் நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியில் உள்ள கட்டிடங்களுக்கு போதிய பாதுகாப்பு வசதிகள் செய்யப்படாததால் இரவு நேரங்களில் இந்த பகுதியில் சமூக விரோத செயல்கள் நடக்கிறது. இதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்தாலும் அது பயன்தரவில்லை.

வரி வசூலில் அதிக கவனம் செலுத்தும் சிவகாசி நகராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க முன்வரவேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்துஆகும். சிவகாசி பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நகராட்சி நிர்வாகத்துக்கு தேவையான வழிகாட்டுதலை மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சிவகாசி பஸ் நிலையத்தில், அடிப்படை வசதி இன்றி பயணிகள் அவதி
குடிநீர், மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் சிவகாசி பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.