அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் செயல்அலுவலர் நிலைக்கான போட்டித்தேர்வுகள் மாவட்டத்தில் 6,159 பேர் எழுதுகிறார்கள்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் செயல்அலுவலர் நிலை பதவிகளுக்கான போட்டித்தேர்வுகளை தர்மபுரி மாவட்டத்தில் 6159 பேர் எழுதுகிறார்கள்.
தர்மபுரி,
இது தொடர்பாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் செயல்அலுவலர் நிலைக்கான குரூப்–3, குரூப்–4 பதவிகளுக்கான போட்டித்தேர்வுகள் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மற்றும் 17–ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் முற்பகல் மற்றும் பிற்பகல் என 2 வேளைகளில் நடக்கிறது. இதற்காக தர்மபுரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் 6,159 பேர் இந்த தேர்வை எழுதுகிறார்கள். இந்த தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு அளவில் செய்யப்பட்டு உள்ளன.
தேர்வு எழுத வரும் விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்தில் செல்போன், கால்குலேட்டர் மற்றும் எலக்ட்ரானிக் கைகடிகாரம் உள்ளிட்ட தகவல் பரிமாற்ற உபகரணங்களை எடுத்து வரவோ, பயன்படுத்தவோ அனுமதிக்கப்படமாட்டார்கள். எனவே மேற்கண்ட பொருட்களை தேர்வு மையத்திற்குள் கொண்டு வருவதை தவிர்க்குமாறு தேர்வு எழுதுவோர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த பொருட்கள் தேர்வுகூடத்தில் தடை செய்யப்பட்டவை என்பதால் அவற்றின் பாதுகாப்பிற்கு சம்பந்தப்பட்ட தேர்வு எழுதுவோரே பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். தேர்வு மையங்களில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. எனவே அனைத்து தேர்வர்களும் தேர்வு மையத்தில் அச்சமின்றி தேர்வை எழுதலாம். தேர்வு எழுதுவோர் எந்தவிதமான முறைகேட்டில் ஈடுபடுவதையும் தவிர்க்க வேண்டும். தேர்வு மையங்கள் வழியாக செல்லும் அனைத்து பஸ்களையும் மையங்களில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.