அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்பட்டால் பிளாஸ்டிக் இல்லா தமிழகத்தை உருவாக்க முடியும் மாவட்ட வன அலுவலர் காஞ்சனா பேச்சு
அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்பட்டால் பிளாஸ்டிக் இல்லா தமிழகத்தை உருவாக்க முடியும் என மாவட்ட வன அலுவலர் காஞ்சனா கூறினார்.
நாமக்கல்,
நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய பசுமைப்படை சார்பில் பிளாஸ்டிக் இல்லா தமிழகம் குறித்த கருத்தரங்கம் மற்றும் உலக வனநாள், உலகநீர் நாள் குறித்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு முதன்மை கல்வி அலுவலர் உஷா தலைமை தாங்கினார். நாமக்கல் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ரகுநாத் வரவேற்றார்.
இதில் நாமக்கல் மாவட்ட வன அலுவலர் காஞ்சனா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பிளாஸ்டிக் இல்லா உலகம் காண முதலில் நமது வீட்டு நிகழ்ச்சிகளில் அவைகளை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். கடைகள் மற்றும் ஓட்டல்களுக்கு செல்லும்போது துணிப்பைகள் மற்றும் பாத்திரங்கள் எடுத்துச்செல்வதை வழக்கமாக்கி கொள்ளவேண்டும். நாம் நமது தேவைகளுக்கு எடுத்துச்செல்லும் போது யார் என்ன சொன்னால் என்ன என்கிற எண்ணம் வேண்டும்.
நமது கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் எப்போதும் ஒன்றிரண்டு துணிப்பை இருக்கும்படி பார்த்துக்கொண்டால் நாம் வெளியில் சென்று வரும்போது ஏதாவது வாங்கி வர ஏதுவாக இருக்கும். தற்போது பொதுமக்களிடம் சிறிது விழிப்புணர்வு ஏற்பட்டு கடைக்கு பொருட்கள் வாங்க செல்லும்போது துணிப்பை எடுத்து செல்கின்றனர். மேலும் கடைகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் காகித பைகளில் பொருட்களை வழங்குகின்றனர். இந்த விழிப்புணர்வு அனைத்து மக்களிடமும் ஏற்பட்டால் பிளாஸ்டிக் இல்லா தமிழகத்தை உருவாக்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் ஈரோடு மக்கள் சிந்தனை பேரவை நிறுவனர் ஸ்டாலின் குணசேகரன், திருச்செங்கோடு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் பேசினர். முடிவில் முதன்மை கல்வி அலுவலக மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் யோகலட்சுமி நன்றி கூறினார்.
இதில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடம் பிடித்த மாணவர்களுக்கு ரூ.2 ஆயிரமும், 2-ம் இடம் பிடித்த மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாயும், 3-ம் இடம் பிடித்த மாணவர்களுக்கு ரூ.500-ம் பரிசாக வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story