அவினாசியில் பரபரப்பு கவரிங் நகைக்கடையில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை


அவினாசியில் பரபரப்பு கவரிங் நகைக்கடையில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை
x
தினத்தந்தி 13 Feb 2019 10:30 PM GMT (Updated: 13 Feb 2019 10:09 PM GMT)

அவினாசியில் உள்ள கவரிங் நகைக்கடையில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினார்கள்.

அவினாசி, 

திருப்பூர் மாவட்டம் அவினாசி மெயின் ரோட்டில் போலீஸ் நிலையம் எதிரில் சீனிவாசா என்ற கோல்டு கவரிங் நகைக்கடை செயல்பட்டு வருகிறது. நேற்று காலை வழக்கம்போல் இந்த கடை திறக்கப்பட்டு வியாபாரம் நடந்து கொண்டிருந்தது.

அப்போது, கோவை மாவட்ட வருமான வரித்துறை அதிகாரி சுதர்சன் தலைமையில் 14 பேர் கொண்ட குழுவினர் 2 கார்களில் கவரிங் நகைக்கடைக்கு திடீரென வந்தனர். அவர்கள், கடைக்குள் அதிரடியாக நுழைந்து, கடையின் இரும்பு ஷட்டரை இழுத்து மூடினார்கள். பின்னர் கடைக்குள் வாடிக்கையாளர்கள் உள்பட யாரையும் அனுமதிக்க வில்லை.

அதேபோல், கடையில் வேலை செய்து வந்த ஊழியர்கள் யாரையும், வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை. நேற்று காலை முதல் மாலை வரை கடையின் இரும்பு ஷட்டர் கதவு பாதியளவில் மூடப்பட்டு இருந்தது. இதனால் அவினாசி கடைவீதியில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த கடைக்கு பொருட்கள் வாங்க வந்த வாடிக்கையாளர்கள், கடை பூட்டி இருந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

இந்த கடையில் வருமான வரி தொடர்பாக சோதனை நடக்கிறது. இதில் பொருட்கள் விற்பனை செய்த பில் புத்தகங்கள், கொள்முதல் செய்த பில், ஜி.எஸ்.டி. உள்ளிட்ட வரியினங்கள் செலுத்திய விவரம், பொருட்கள் இருப்பு ஆகியன குறித்து தணிக்கைகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தனர். வேறு பிற விவரங்களை அவர்கள் கூற மறுத்து விட்டனர். 

Next Story