மும்பையில் இருந்து புனே, நாசிக் வழித்தடத்தில் மார்ச் இறுதியில் மின்சார ரெயில் சோதனை ஓட்டம் அதிகாரி தகவல்


மும்பையில் இருந்து புனே, நாசிக் வழித்தடத்தில் மார்ச் இறுதியில் மின்சார ரெயில் சோதனை ஓட்டம் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 13 Feb 2019 11:15 PM GMT (Updated: 13 Feb 2019 11:08 PM GMT)

மும்பையில் இருந்து புனே, நாசிக் வழித்தடத்தில் மார்ச் மாதம் இறுதியில் மின்சார ரெயிலின் சோதனை ஓட்டம் தொடங்கும் என மத்திய ரெயில்வே அதிகாரி கூறினார்.

மும்பை,

மும்பையில் இருந்து புனே, நாசிக் வழித்தடத்தில் மார்ச் மாதம் இறுதியில் மின்சார ரெயிலின் சோதனை ஓட்டம் தொடங்கும் என மத்திய ரெயில்வே அதிகாரி கூறினார்.

மின்சார ரெயில் சேவை

மும்பையின் மின்சார ரெயில் சேவை உலகளவில் மிகவும் பரபரப்பானதாக அறியப்படுகிறது. அந்த அளவுக்கு மும்பையில் மின்சார ரெயில் சேவையின் பயன்பாடு இருக்கிறது. மத்திய மற்றும் மேற்கு ரெயில்வே வழித்தடங்களில் இயங்கும் இந்த சேவைகளை தினசரி 80 லட்சம் பேர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மின்சார ரெயில் சேவையை மும்பையில் இருந்து சுமார் 200 கி.மீ. தொலைவில் இருக்கும் புனே, நாசிக் வரையிலும் நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

தொழில்நுட்ப பணிகள்

இந்த கோரிக்கையை ஏற்று மத்திய ரெயில்வே தனது புறநகர் மின்சார ரெயில் சேவையை புனே மற்றும் நாசிக் வரையிலும் நீட்டிக்க முடிவு செய்தது. இதற்காக பிரத்யேக மின்சார ரெயில் சென்னையில் தயார் செய்யப்பட்டு மும்பைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

மும்பையில் உள்ள ரெயில்வே பணிமனையில் அந்த ரெயிலில் சில தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் மாற்ற பணிகள் நடந்து வருகின்றன. அந்த ரெயிலை வைத்து புனே, நாசிக் வழித்தடங்களில் மின்சார ரெயில் சேவை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யும் வகையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது.

அடுத்த மாதம் சோதனை ஓட்டம்

இதுபற்றி மத்திய ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மும்பை - புனே, நாசிக் வழித்தடங்களில் சோதனை ஓட்டத்துக்கு கொண்டு வரப்பட்டு உள்ள மின்சார ரெயிலில் நடந்து வரும் தொழில்நுட்ப பணிகள் முடிவதற்கு குறைந்தபட்சம் ஒரு மாதமாவது ஆகும்.

மேலும் மலைப்பகுதியில் இந்த ரெயிலை இயக்கி பார்ப்பதற்கு அனுமதியும் பெற வேண்டி உள்ளது. இந்த பணிகள் முடிந்ததும் அடுத்த மாதம் (மார்ச்) இறுதியில் சோதனை ஓட்டம் தொடங்கும்’’ என்றார்.

Next Story