கலை பண்பாட்டுத்துறை சார்பில் 26 கலைஞர்களுக்கு விருது அமைச்சர் பாண்டியராஜன் வழங்கினார்
கலை பண்பாட்டுத்துறை சார்பில் 26 கலைஞர்களுக்கு அமைச்சர் பாண்டியராஜன் விருது வழங்கினார்.
அடையாறு,
தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில், மண்ணின் கலைவிழா மற்றும் சென்னை மாவட்ட கலை விருது வழங்கும் விழா சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு இசை கல்லூரியில் நடைபெற்றது.
விழாவில் சாதனை படைத்த கலைஞர்கள் 26 பேருக்கு ‘கலை இளமணி’, ‘கலை வளர்மணி’, ‘கலை சுடர்மணி’, ‘கலை நன்மணி’ மற்றும் ‘கலை முதுமணி’ விருதுகளை அமைச்சர் பாண்டியராஜன் வழங்கினார்.
பின்னர் அமைச்சர் பாண்டியராஜன் பேசும்போது, “கலை பண்பாட்டுத்துறையின் இணைய தளம் மேம்படுத்தப்பட்டு விரைவில் தொடங்கப்பட உள்ளது. அதில் இசைக்கலைஞர்கள், நாட்டிய கலைஞர்கள், கிராமிய கலைஞர்கள் என அனைத்து கலைஞர்களும் தங்கள் குழுவின் விவரத்தை புகைப்படம், வீடியோ பதிவுகளுடன் பதிவு செய்து கொள்ளலாம். இதில் பதிவு செய்து உள்ள குழுக்களுக்கு அரசு நிகழ்ச்சிகளில் கலை நிகழ்ச்சி நடத்தும் வாய்ப்பு வழங்கப்படும். தனியார் நிகழ்ச்சிகளிலும் வாய்ப்பு வழங்கலாம்” என்றார்.
விழாவில் ஜெயவர்த்தன் எம்.பி., மயிலாப்பூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. நட்ராஜ், தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி பதிவாளர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழக கிராமிய கலைகளான கரகம், காவடி, பொய்க்கால் குதிரை ஆட்டம், நாட்டுப்புற பாட்டு ஆகியவையும் நடைபெற்றது.
Related Tags :
Next Story