நீலகிரி மாவட்டத்தில் 70 ஆசிரியர்கள் மீதான பணியிடை நீக்கம் ரத்து நேற்று முதல் பணிக்கு திரும்பினர்


நீலகிரி மாவட்டத்தில் 70 ஆசிரியர்கள் மீதான பணியிடை நீக்கம் ரத்து நேற்று முதல் பணிக்கு திரும்பினர்
x
தினத்தந்தி 14 Feb 2019 10:45 PM GMT (Updated: 14 Feb 2019 7:06 PM GMT)

நீலகிரி மாவட்டத்தில் 70 ஆசிரியர்கள் மீதான பணியிடை நீக்கம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர்கள் நேற்று முதல் பணிக்கு திரும்பி உள்ளனர்.

ஊட்டி,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 21 மாத ஊதிய நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் கடந்த ஜனவரி மாதம் 22-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தால் பள்ளி மாணவ- மாணவிகளின் படிப்பு பாதிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து முதல்-அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர். இதையடுத்து போராட்டத்தின் போது பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிடப்பட்டது. குன்னூர் கல்வி மாவட்டத்தில் தொடக்கப்பள்ளிகளில் பணிபுரிந்த 132 ஆசிரியர்கள், கூடலூர் கல்வி மாவட்டத்தில் பணிபுரிந்த 350 ஆசிரியர்கள் என மொத்தம் 482 பேர் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மற்ற பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

மேலும் நீலகிரியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிக்கு வராத 70 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் பள்ளி மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதற்காக ஆயிரத்து 584 ஆசிரியர்கள் மீதான பணியிடை நீக்கம் நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்தது.

இதுகுறித்து தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் பணியமர்த்துவது குறித்த நடவடிக்கையை மேற்கொள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து குன்னூர் மற்றும் கூடலூர் கல்வி மாவட்டத்தில் 70 ஆசிரியர்கள் மீதான பணியிடை நீக்கம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் நேற்று முதல் அந்தந்த பள்ளிகளுக்கு பணிக்கு திரும்பினர்.

Next Story