வறுமையில் வாடிய மாற்றுத்திறனாளியின் குடும்பத்துக்கு பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு உதவிகள் கலெக்டர் வழங்கினார்


வறுமையில் வாடிய மாற்றுத்திறனாளியின் குடும்பத்துக்கு பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு உதவிகள் கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 15 Feb 2019 11:00 PM GMT (Updated: 15 Feb 2019 5:28 PM GMT)

வறுமையில் வாடிய மாற்றுத்திறனாளியின் குடும்பத்துக்கு பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு உதவிகளை கலெக்டர் கந்தசாமி வழங்கினார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை வேங்கிக்கால் ஜெய்பீம் பகுதியை சேர்ந்த அம்மு என்ற 15 வயது சிறுமி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 12-ந் தேதி கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளின் செல்போன் எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலம் ஒரு குறுந்தகவல் அனுப்பி உள்ளார். அதில் ‘நான் 7-ம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்து விளையாட்டு போட்டிகளில் பரிசுகள் பெற்ற மாணவி. தற்போது நோயினால் பாதிக்கப்பட்டு கை, கால்கள் முறிந்து உருமாறி நடக்க முடியாத நிலையில் அண்ணன் உதவியுடன் இருக்கிறேன். எனக்கு மாத உதவித்தொகை வழங்கி உதவ வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தார்.

இதுகுறித்து மாவட்ட சமூக நல அலுவலரை நேரில் சென்று விசாரணை நடத்த கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டார். அதன்பேரில் அவர், அம்முவின் வீட்டிற்கு சென்று விவரங்களை கேட்டறிந்தார். அதில் அம்முவின் தந்தை சேட்டு. இவருக்கு பத்மா, தேவி ஆகிய 2 மனைவிகள். இதில் பத்மாவிற்கு சக்திவேல் (26), அம்மு உள்பட 8 குழந்தைகள், தேவிக்கு 2 குழந்தைகள் உள்ளன. சேட்டு, பத்மா, தேவி ஆகியோர் இறந்து விட்டனர். மாற்றுத்திறனாளியான சக்திவேல் அவரது சகோதர, சகோதரிகளை பராமரித்து வருகிறார்.

இவர்களில்2 தங்கைகள் மற்றும் 1 தம்பிக்கு சக்திவேல் திருமணம் செய்து வைத்து உள்ளார். மேலும் 2 தம்பிகள் மற்றும் 2 தங்கைகளை இல்லத்தில் தங்க வைத்து படிக்க வைத்து வருகிறார். சக்திவேல் ஒரு சிறிய உணவு விடுதியில் வேலை செய்து தனக்கு கிடைக்கும் குறைந்த வருமானத்தில் தங்கை அம்மு, தம்பி அஜீத் ஆகியோருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய வாடகை வீட்டிற்கு அட்வான்ஸ் கொடுத்து அம்முவை அழைத்து செல்லும்போது அவரின் உடல்நிலையினை பார்த்து வாடகைக்கு வீடு தர மறுத்ததால், ஏற்கனவே அவர்கள் வசித்த வீட்டின் ஓரத்தில் மிகுந்து சிரமத்துடன் வசித்து வருவது தெரியவந்தது.

இந்த தகவலை கலெக்டரிடம் மாவட்ட சமூக நல அலுவலர் தெரிவித்தார். இதையடுத்து கலெக்டர், உடல்நல குறைப்பாட்டினை பொருட்படுத்தாமல் தாய், தந்தையாக இருந்து தனது தம்பிகளையும், தங்கைகளையும் பராமரித்து வந்த சக்திவேலுக்கு உடனடியாக மருத்துவ உதவிகள் அளிக்கவும், அம்முவை இல்லத்தில் சேர்க்கவும் உத்தரவிட்டார். மேலும் அவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா ஏற்பாடு செய்து அரசு பசுமை வீடு கட்டி கொடுக்க முடிவு செய்தார்.

இந்த பசுமை வீடு கட்டி முடிக்கப்பட்டு நேற்று திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கலந்து கொண்டு வீட்டிற்கான சாவியை சக்திவேலிடம் வழங்கினார்.

மேலும் இதில் மின் இணைப்பு, குடிநீர் வசதி, வீட்டிற்கு தேவையான பாத்திரங்கள், உடுத்த உடைகள், சமையல் கியாஸ் வசதியுடன் கூடிய அடுப்பு வழங்கி வாடகை வீட்டிற்கே வழியில்லாதவர்களை சொந்த வீட்டிற்கு உரிமையாளர்களாக ஆக்கினார்.

மேலும் அவர்களுடன் அமர்ந்து கலெக்டர் காலை உணவு சாப்பிட்டார். பொருளாதார நிலையில் பின்தங்கி இருக்கும் அவர்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் ஜெராக்ஸ் வசதியுடன் கூடிய டீக்கடை வைத்து கொடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் அம்முவை தொடர்ந்து 9-ம் வகுப்பு படிக்க ஏற்பாடு செய்து, அவருக்கு பராமரிப்பு தொகையாக மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கவும் கலெக்டர் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார். அதுமட்டுமின்றி வீட்டில் இருந்து கடைக்கு சென்று வர சைக்கிளும் வழங்கப்பட்டு உள்ளது.

நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப், மாவட்ட சமூக நல அலுவலர் கிறிஸ்டீனா டார்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ரேணுகாம்பாள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வேங்கிக்கால் ஊராட்சி செயலாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story