உஷாரய்யா உஷாரு..


உஷாரய்யா உஷாரு..
x
தினத்தந்தி 17 Feb 2019 12:53 PM IST (Updated: 17 Feb 2019 12:53 PM IST)
t-max-icont-min-icon

அவர் வடகிழக்கு மாநிலம் ஒன்றை சேர்ந்தவர். வயது 45-ஐ கடந்துகொண்டிருக்கிறது. அங்குள்ள தொண்டு நிறுவனம் ஒன்றில் சேர்ந்து பணியாற்றிக்கொண்டிருக்கிறார். அவரது தாய்மொழியைத் தவிர, ஓரளவு ஆங்கிலம் பேசத் தெரிந்தவர். அவர் பணிரீதியாக வட இந்திய மாநிலங்கள் சிலவற்றுக்கு சென்றிருக்கிறார்.

அப்போது அங்குள்ள பிரபலமான சுற்றுலா பகுதிகளையும் கண்டு களித்திருக்கிறார். தென்னிந்தியாவை சுற்றிப்பார்க்கவேண்டும் என்பது அவரது தீராத ஆசை. அவரது நண்பரும் உடன் வர சம்மதிக்க, 15 நாட்களுக்கான பயணத்திட்டம் ஒன்றை வகுத்து, ரெயிலில் டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்தார்.

பயணம் தொடங்குவதற்கு முந்தைய நாள், உடன் வரவேண்டிய நண்பர் வீட்டில் பெரிய அளவில் கொள்ளை சம்பவம் ஒன்று நடந்துவிட்டது. அதனால் அவர் போலீஸ் விசாரணைக்காக வீட்டிலே சில நாட்கள் தங்கவேண்டிய சூழ்நிலை உருவானதால், அவரால் திட்டமிட்டபடி பயணத்தில் கலந்துகொள்ள முடியவில்லை. அதனால் இவர் மட்டும் அரைகுறை மனதோடு தனியாக பயணத்தை தொடங்கினார்.

12 நாட்களை மூன்று மாநிலங்களில் செலவிட்ட அவர், மிகுந்த மகிழ்ச்சியோடு பயணத்தின் கடைசிகட்டமாக அழகுநிறைந்த அந்த மாநிலத்திற்குள் நுழைந்தார். கேள்விப்பட்டதைவிட அங்கே இயற்கை அழகு கொட்டிக்கிடந்தது.

எல்லா மாநிலங்களிலுமே அவருக்கு ஏதாவது ஒரு வழிகாட்டி கிடைத்துவிடுவார். சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள், தங்கும் இடம், உணவு போன்றவைகளுக்கு அந்த வழிகாட்டியே ஏற்பாடு செய்துவிடுவார். அதுபோல் இந்த மாநிலத்திலும் ஒருவர் அவரை அணுகினார். ‘தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்வதாக’ கூறினார். இவரும் அந்த நபரை நம்பி சென்றார். குறிப்பிட்ட ஒரு வீட்டிற்கு அழைத்துச்சென்று ‘பேயிங் கெஸ்ட்’ ஆக்கியிருக்கிறார். அந்த வீட்டில் ஒரு ஆணும், இளம்பெண்ணும் அவருக்கு பிடித்த உணவுகளை விதவிதமாக சமைத்துக்கொடுத்திருக்கிறார்கள். அதற்கு மிககுறைந்த அளவே பணம் பெற்றிருக்கிறார்கள். அந்த வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்திருக்கிறது. அந்த நபரே ஒரு காரை ஏற்பாடு செய்துகொடுத்து வெளியே சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்களுக்கெல்லாம் அழைத்துச் சென்றிருக்கிறார்.

வீட்டில் சமையல் செய்த இருவர், கார் டிரைவர், அந்த நபர் ஆகிய நான்கு பேரும் சேர்ந்து இந்த சுற்றுலா பயணியிடம் அதிக நெருக்கம் காட்டினார்கள். நண்பர்கள் போல் பழகியுள்ளனர். ஒன்றாக அமர்ந்து மது அருந்தியிருக்கிறார்கள். ‘எந்த மாநிலத்தில் உள்ளவர்களும் தங்களிடம் இந்த அளவுக்கு பழகியதில்லையே!’ என்று அவர் நெகிழ்ந்துபோனார்.

அன்று இரவு, அதிக குளிர். அந்த பெண்ணைத் தவிர, அவர்கள் மூன்று பேரும் தனியாக அமர்ந்து புகைத்துக்கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது இந்த பயணியும் அவர்களிடம் போய் சேர, ‘நாங்கள் இதை புகைத்துதான் இந்த கடுங்குளிரை சமாளிக்கிறோம்’ என்று கூறி, அவருக்கும் புகைக்க கொடுத்திருக்கிறார்கள். புகைத்தது அவருக்கு ஒருவித கிறுகிறுப்பைத்தர, புகைப்பதை அவரால் நிறுத்தமுடியவில்லை. தொடர்ந்திருக்கிறார்... நேரம் செல்லச் செல்ல அவர் தன்னிலை மறப்பதை உணர்ந் திருக்கிறார்.

மறுநாள் மாலை வரை அவரால் விழிக்க முடியவில்லை. வெகுதாமதமாக எழுந்து வந்தவரை எதிர்பார்த்து மூவரும், உடன் அந்த சமையல்கார பெண்ணும் காத்திருந் திருக்கிறார்கள். அந்த பெண் தலைவிரிகோலமாக அழுதபடி இருந்திருக்கிறாள். இரவில் ஏதோ விபரீதம் நடந்திருப்பதை உணர்ந்த பயணி சுதாரிப்பதற்குள், மூன்று ஆண்களும் சேர்ந்து அவரை தாக்கியிருக்கிறார்கள். காரணம் என்ன என்று சொல்லாமலே அடித்திருக்கிறார்கள்.

அவர் கதறியபடி காரணம் கேட்க, ‘நீ நேற்று அளவுக்கு அதிகமாக கஞ்சா புகைத்துவிட்டு, அந்த மயக்கத்தில் கொடூர மிருகமாக மாறியிருக்கிறாய். இந்த சமையல்கார பெண்ணின் கற்பை சூறையாடிவிட்டாய்’ என்றிருக்கிறார்கள்.

அந்த வீட்டில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமரா காட்சியையும் ஆதாரமாக அவரிடம் காட்டினார்கள். அதில் அவள் காபியோடு அவரது படுக்கை அறைக்கு செல்வதும், பின்பு அரை மணி நேரம் கழித்து ஆடை எல்லாம் கிழிந்த நிலையில் அலங்கோலமாக அழுதுகொண்டு ஓடிவருவதும் பதிவாகியிருந்தது.

‘இவளுக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவளது தந்தை இந்த ஏரியா ரவுடி. இந்த விஷயம் வெளியே தெரிந்தால் உன்னை கொலைசெய்யக்கூட தயங்கமாட்டார்கள். போலீசுக்கு போனால் நீ இந்த ஜென்மம் முழுக்க ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டியதிருக்கும்’ என்றார்கள்.

அந்த சுற்றுலா பயணி மிரண்டார். தப்பிக்க முடியாத அளவுக்கு தான் சிக்கியிருப்பதை உணர்ந்தார். இறுதியில் பணம் கொடுக்க முன்வந்திருக்கிறார். பேரம் நடந்திருக்கிறது. அங்கிருந்தே சொந்த ஊரில் உள்ள தனது நண்பனுக்கு போன் செய்து, உடனே மூன்று லட்சம் ரூபாயை தனது வங்கி கணக்கில் செலுத்தும்படி கூறியிருக்கிறார். இரண்டொரு நாளில் அவர் பணம் செலுத்த, அந்த பணம் இங்கே கைமாறியிருக்கிறது.

அந்த சுற்றுலா பயணி அளவுக்கு அதிகமாக கஞ்சா புகைத்து தன்னிலை மறந்தது உண்மை. ஆனால் பாலியல் பலாத்காரம் எதுவும் நடக்கவில்லை. அந்த நால்வர் கூட்டணி இதுபோல் முன்பும் ‘சதி நாடகத்தை அரங்கேற்றி’ சிலரை திட்டமிட்டு ஏமாற்றி பணம் பறித்திருக்கிறதாம். அதற்கு அந்த பெண்ணும் உடந்தை..!

வெளிஇடங்களுக்கு சுற்றுலா போகிறவங்க இதையும் கவனத்தில் வைச்சுக்குங்க..!

- உஷாரு வரும்.

Next Story