வனப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு, சுருளியாறு மின்நிலையத்துக்கு படையெடுக்கும் காட்டுயானைகள்


வனப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு, சுருளியாறு மின்நிலையத்துக்கு படையெடுக்கும் காட்டுயானைகள்
x
தினத்தந்தி 17 Feb 2019 10:45 PM GMT (Updated: 17 Feb 2019 5:40 PM GMT)

வனப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலியால் சுருளியாறு மின்நிலையத்துக்கு காட்டுயானைகள் வருகை அதிகரித்துள்ளது.

கூடலூர், 

தேனி மாவட்டம், கூடலூர் அருகே வண்ணாத்திப்பாறை, மங்கலதேவி கண்ணகி கோவில், பளியன்குடி, அத்திஊத்து மாவடி, வட்ட தொட்டி, சுருளியாறு ஆகிய வனப்பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் மான், யானை, கரடி, காட்டுப்பன்றி, காட்டெருமை, குரங்கு உள்ளிட்ட விலங்குகளும் மற்றும் அரியவகை மரங்களும் காணப்படுகின்றன.

இந்த பகுதியில் மரங்களை வெட்டி கடத்துதல் மற்றும் விலங்குகளை வேட்டையாடும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த கும்பலை பிடிப்பதற்கு வனத்துறை சார்பில் குள்ளப்பகவுண்டன்பட்டி, சுருளியாறு மின்நிலைய சாலை, லோயர்கேம்ப் ஆகிய இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த வனப்பகுதிகளில் மழைக்காலங்களில் வனவிலங்குகளுக்கு தேவையான தண்ணீர் மற்றும் உணவுகள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கின்றன. ஆனால் கோடைக்காலங்களில் அந்த பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. மேலும் மரம், செடிகள் காய்ந்து விடுகின்றன. இதனால் மலையடிவார பகுதியான சுருளியாறு மின்நிலையத்தை ஒட்டிய புளிச்சக்காடு, கோபுரம், குரங்கடி, மாடம் ஆகிய பகுதிகளுக்கு தண்ணீர் தேடி காட்டுயானைகள் படையெடுத்து வருகின்றன.

இந்நிலையில் நேற்று பகல் பொழுதில் சுருளியாறு மின்நிலையம் பகுதியில் 4 காட்டுயானைகள் சுற்றித்திரிந்ததால், அதைப்பார்த்த மின்நிலைய அலுவலர்கள் மற்றும் குடியிருப்பில் வசிப்பவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். வனவிலங்குகள் மலையடிவாரப் பகுதியில் இருந்து ஊருக்குள் வருவதை தடுக்க வனப்பகுதிக்குள் உள்ள குட்டைகளில் தண்ணீரை தேக்கி வைக்க வேண்டும். வனவிலங்குகளுக்கு உணவு கிடைக்கும் வகையில் பழ மரங்கள் மற்றும் புற்களை வனப்பகுதிக்குள் பயிரிட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story