நாகர்கோவில் மாநகராட்சியுடன் 18 ஊராட்சிகளை இணைக்கும் முடிவை ரத்து செய்ய வேண்டும்


நாகர்கோவில் மாநகராட்சியுடன் 18 ஊராட்சிகளை இணைக்கும் முடிவை ரத்து செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 18 Feb 2019 11:00 PM GMT (Updated: 18 Feb 2019 2:54 PM GMT)

நாகர்கோவில் மாநகராட்சியுடன் 18 ஊராட்சிகளை இணைக்கும் முடிவை ரத்து செய்ய வேண்டும் என்று மீன் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மனு கொடுத்தனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறும். அதேபோல் நேற்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. இதற்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் வாங்கினார்.

அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் 400 பேர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர். இதனால் நேற்று மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் தரைதளத்தில் மக்கள் கூட்டம் அளவுக்கதிகமாக இருந்தது. அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து, அவற்றின்மீது விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். இதில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. அப்போது சமூக நலத்துறை சார்பாக சத்தியவாணிமுத்து அம்மையார் நினைவு விலையில்லா தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தின்கீழ் 80 பேருக்கு ரூ.3 லட்சத்து 47 ஆயிரத்து 200 மதிப்பிலான தையல் எந்திரங்களை கலெக்டர் பிரசாந்த் வடநேரே வழங்கினார். அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இந்த முகாமில் குமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் அந்தோணி தலைமையில் நிர்வாகிகள் அலெக்சாண்டர், மரியபுரோஸ் உள்ளிட்டோர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:–

குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் நகராட்சியை, மாநகராட்சியாக மாற்றி, ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 12 ஊராட்சிகளையும், தோவாளை, அகஸ்தீஸ்வரம் ஒன்றியங்களுக்கு உட்பட்ட 6 ஊராட்சிகளையும் நாகர்கோவில் மாநகராட்சியுடன் இணைக்க அரசு முடிவு செய்திருப்பது சரியல்ல. ஏற்கனவே நாகர்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிதண்ணீர், மின்சாரம், சாலைகள், சுகாதார வசதிகள் சீரழிந்து மக்கள் சொல்லொண்ணா கஷ்டத்தில் வாழ்ந்து வருகின்றனர். இந்தநிலையில் மாநகராட்சியாக மாற்றி அதன் எல்லையை விரிவாக்குவது மக்களுக்கு மிகுந்த சிரமங்களை உருவாக்கும். எனவே 18 ஊராட்சிகளை இணைக்கும் முடிவை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.

இதேபோல் நாம் தமிழர் கட்சியின் குமரி மண்டல செயலாளர் நாகராஜன், நிர்வாகிகள் ஜான்சிலின் சேவியர்ராஜ், அகமது கபீர் ஆகியோர் தலைமையில் கொடுத்த மனுவில், “5–2–2019 அன்று பொன்மனை, வேர்கிளம்பி, கடையால் ஆகிய பேரூராட்சிகளில் முறைகேடாக நடைபெற்றுள்ள டெண்டர்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளவும், அதனை ரத்து செய்து மறு டெண்டர் நடத்த வேண்டும்“ எனக்கோரி இருந்தனர்.

ஆதிதிராவிடர் முன்னேற்ற இயக்க தலைவர் ஜாண்விக்டர்தாஸ் தலைமையில் மயிலாடி சுப்பிரமணியபுரம் காலனியை சேர்ந்த தர்மராஜ் என்பவரின் மனைவி சொர்ணம் மற்றும் உறவினர்கள் கொடுத்த மனுவில், “எனது மகன் சபரி சரவணன் (வயது 21) கடந்த 10–ந் தேதி காணாமல் போய்விட்டான். 12–ந் தேதி உசரவிளை பகுதியில் உள்ள கால்வாயில் உடல் ஊதிய நிலையில் பிணம் கிடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்தில் காணவில்லை என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனது மகனின் இறப்பில் நிகழ்ந்த சம்பவங்களை வைத்து பார்க்கும்போது, அவனை மர்ம நபர்கள் கொலை செய்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. எனவே இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி நடவடிக்கை எடுத்து நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்“ எனக்கூறப்பட்டுள்ளது.

நாகர்கோவில் பெருவிளை கோட்டவிளையை சேர்ந்த ஜார்ஜ் (70) என்பவர் கொடுத்த மனுவில், “தன்னிடம் இருந்து 3 நபர்களால் அபகரிக்கப்பட்ட 8 சென்ட் நிலத்தை மீட்டுத்தரவேண்டும்“ எனக்கூறியுள்ளார்.

Next Story