ஆக்கிரமிப்பு நிலத்தினை மீட்டுத்தர கோரி கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி


ஆக்கிரமிப்பு நிலத்தினை மீட்டுத்தர கோரி கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 19 Feb 2019 4:30 AM IST (Updated: 19 Feb 2019 2:14 AM IST)
t-max-icont-min-icon

ஆக்கிரமிப்பு நிலத்தினை மீட்டுத்தர கோரி கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர்,

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள வடசேரி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 47). கூலித் தொழிலாளி. இவர் நிலப் பிரச்சினை தொடர்பாக மனு கொடுக்க நேற்று கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தின் கூட்டரங்கு நுழைவு வாயில் அருகே வந்து நின்று கொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக திடீரென தான் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைக்கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், உடனடியாக ஓடி வந்து பெட்ரோல் பாட்டிலை அவரிடமிருந்து பிடுங்கினர். பின்னர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிப்பது உள்ளிட்ட தவறான முடிவுகளுக்கு யாரும் செல்லக்கூடாது என முருகேசனுக்கு அறிவுரை வழங்கி போலீசார் ஆசுவாசப்படுத்தினர்.

இதையடுத்து முருகேசனிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, வடசேரி கிராமத்தில் உள்ள எனது நிலத்தினை, அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் உதவியோடு சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதுதொடர்பாக அவர்களை தட்டி கேட்டபோது என்னை மிரட்டுகின்றனர். தோகைமலை போலீஸ் நிலையம், வருவாய்த்துறை அலுவலகங்களில் மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் தான் மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்றேன், என்று தெரிவித்தார்.

இதற்கிடையே அங்கு நின்ற தீயணைப்பு வாகனத்திலிருந்து தண்ணீரை எடுத்து வந்து தீயணைப்பு வீரர்கள், முருகேசன் மீது ஊற்றி அவரை குளிக்கவைத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார், முருகேசனை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரி கணேசிடம், நிலப் பிரச்சினை தொடர்பான கோரிக்கை மனுவை முருகேசன் கொடுத்து முறையிட்டார். பின்னர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரி கணேஷ், அங்கிருந்த குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் லியாகத்தை அழைத்து, உடனடியாக நிலத்தை அளவீடு செய்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பின் அதனை மீட்டு முருகேசனிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார். இதையடுத்து முருகேசன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சம்பவம் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story