மராட்டியத்தில் மார்ச் 1-ந் தேதி ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தை தொடங்க திட்டம்


மராட்டியத்தில் மார்ச் 1-ந் தேதி ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தை தொடங்க திட்டம்
x
தினத்தந்தி 18 Feb 2019 10:45 PM GMT (Updated: 18 Feb 2019 10:09 PM GMT)

மராட்டியத்தில் வருகிற 1-ந் தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்க ராகுல்காந்தி திட்டமிட்டு உள்ளார்.

மும்பை,

நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல்- மே மாதங்களில் நடக்க உள்ளது. இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்திற்கு அடுத்து அதிக நாடாளுமன்ற தொகுதியை கொண்ட மராட்டியத்தில் தற்போதே தேர்தலுக்காக கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன.

குறிப்பாக காங்கிரஸ் கட்சி ஒத்த கருத்துடைய கட்சிகளை இணைந்து பெரும் பலத்துடன் தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளது. மேலும் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி மற்றும் கட்சியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள பிரியங்கா காந்தி ஆகியோரை அழைத்து மராட்டியத்தில் மாபெரும் பொதுக்கூட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளது. இதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

துலேயில் பிரசாரம்

இந்த நிலையில் வரும் மார்ச் 1-ந் தேதி துலேயில் மராட்டியத்தில் தனது முதல் நாடாளுமன்ற பிரசாரத்தை ராகுல் காந்தி தொடங்க உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

துலேயில் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றால், அருகில் உள்ள ஜல்காவ், நந்தூர்பர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கட்சி தொண்டர்களும் கலந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மராட்டியத்தில் 4 அல்லது 5 பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும் என ராகுல்காந்திக்கு மாநில காங்கிரஸ் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மார்ச் 1-ந் தேதி ராகுல் காந்தி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வது குறித்து கட்சியின் மாநில தலைவர் அசோக் சவான் அளித்த பேட்டியில், “ நாங்கள் துலே மாவட்டத்தில் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். ஆனால் இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ முடிவு எடுக்கப்படவில்லை” என்றார்.

கூட்டாக பொதுக்கூட்டம்

முன்னதாக நாளை (புதன்கிழமை) மற்றும் 23-ந் தேதி நாந்தெட் மற்றும் பீட் மாவட்டங்களில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டாக பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன.

இந்த பொதுக்கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவன தலைவர் சரத்பவார், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மராட்டிய பொறுப்பாளர் மல்லிகர்ஜூன கார்கே மற்றும் இரு கட்சிகளின் முக்கிய தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

Next Story