தமிழ்நாடு அறக்கட்டளை ‘அரசு பள்ளிகளை தத்து எடுத்திருப்பது பாராட்டுக்குரியது’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சு
தமிழ்நாடு அறக்கட்டளை அரசு பள்ளிகளை தத்து எடுத்திருப்பது பாராட்டுக்குரியது என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார்.
சென்னை,
தமிழ்நாடு அறக்கட்டளையின் ஆண்டு மாநாடு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் நேற்று நடந்தது. அறக்கட்டளை தலைவரும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான எஸ்.ராஜரத்தினம் தலைமை தாங்கினார். தொழிலதிபர் டாக்டர் பழனி ஜி.பெரியசாமி, மியூசிக் அகாடமி தலைவர் என்.முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவர்னர் பன்வாரிலால் புரோகித் குத்துவிளக்கு ஏற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஆண்டு அறிக்கையை வெளியிட்டு, ‘மாவட்ட கார்பஸ் நிதி’ (மண்வாசனை) என்ற திட்டத்தை கவர்னர் பன்வாரிலால் புரோகித் அறிமுகப்படுத்தினார்.
பின்னர் அவர் பேசும் போது, ‘அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் ஆதரவுடன், தமிழகத்தில் கல்வி வாய்ப்புகளை மேம்படுத்தும் பணியில் அறக்கட்டளை கவனம் செலுத்தி உள்ளது. கிராமப்புற அரசு பள்ளிகளில் பள்ளிக்கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக, 9 மாவட்டங்களில் உள்ள 51 அரசு பள்ளிகளில் படிக்கும் சுமார் 5 ஆயிரம் குழந்தைகளை அறக்கட்டளை தத்து எடுத்து படிக்க வைப்பது பாராட்டுக்குரியது’ என்றார்.
அறக்கட்டளையின் அமெரிக்கா பிரிவு தலைவர் டாக்டர் சோமசுந்தரம் விருதுகளை வழங்கி பேசினார். தொடர்ந்து பேராசிரியை ஐ.ஏ.பர்வீன் சுல்தானா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். அறக்கட்டளை நிர்வாகி சுவர்னா எஸ்.பிள்ளை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அறக்கட்டளை பொருளாளர் என்.நாகப்பன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story