பட்டாசு தொழிலாளர்களுக்கு நிவாரணம் கேட்டு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


பட்டாசு தொழிலாளர்களுக்கு நிவாரணம் கேட்டு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Feb 2019 10:45 PM GMT (Updated: 21 Feb 2019 3:14 PM GMT)

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி,

மேட்டூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைத்ததை ஏற்க மறுத்த நிர்வாகம், தொழிலாளர்கள் 99 பேரை சட்ட விரோதமாக பணிநீக்கம் செய்ததை கண்டித்தும், சிவகாசி பட்டாசு தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் ராஜேந்திரன், ராமர், வீரமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ரெங்கராஜன் பேசுகையில், சிவகாசி பகுதியில் பட்டாசு தயாரிக்கும் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 8 லட்சம் தொழிலாளர்கள் வேலையின்றி தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள். எனவே, இந்த பிரச்சினையில் அரசு தலையிட்டு பாதிக்கப்பட்ட பட்டாசு தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும். அத்துடன் பட்டாசு ஆலை நிர்வாகங்கள், சம்பள இழப்பை கருத்தில் கொண்டு தொழிலாளர்களை பாதுகாக்கும் வகையில் சட்டப்படியான சம்பளத்தை வழங்கிட வேண்டும். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். மேலும், பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட் மயமாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் மத்திய அரசு கைவிட வேண்டும் என்றார்.

Next Story