அம்மாபேட்டை பகுதியில் பலத்த சூறாவளிக்காற்றில் ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன


அம்மாபேட்டை பகுதியில் பலத்த சூறாவளிக்காற்றில் ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன
x
தினத்தந்தி 22 Feb 2019 4:15 AM IST (Updated: 22 Feb 2019 12:24 AM IST)
t-max-icont-min-icon

அம்மாபேட்டை பகுதியில் பலத்த சூறாவளிக்காற்றில் ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன.

அம்மாபேட்டை, 

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள கொமராயனூர், கொளத்தூர் பகுதியில் நேற்று மதியம் 2 மணி அளவில் லேசான காற்று வீசியது. சிறிதுநேரத்தில் இது பலத்த சூறாவளிக்காற்றாக மாறியது.

இந்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அம்மாபேட்டை பகுதியில் உள்ள தோட்டங்களில் பயிர் செய்யப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாழைகள் சேதம் அடைந்தன. இது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து விவசாயி ஒருவர் கண்ணீருடன் கூறியதாவது:-

நான் 4 ஏக்கர் நிலத்தை வைத்து விவசாயம் செய்து வருகிறேன். எனது தோட்டத்தில் 4 ஆயிரம் நேந்திரம் வகை வாழைகளை பயிரிட்டிருந்தேன். இந்த வாழைகள் நன்கு வளர்ந்து இன்னும் 20 முதல் 30 நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்தன. இந்த நிலையில் இன்று(நேற்று) வீசிய சூறாவளிக்காற்றில் எனது வாழைகள் சாய்ந்து நாசமானது. கடந்த ஆண்டு எனது வாழைகள் நோய் தாக்கி முற்றிலும் சேதமடைந்தன. அதற்கு முந்தைய ஆண்டு மஞ்சள் பயிரிட்டிருந்தேன். அப்போது மழை பெய்து மஞ்சள் பயிர் அழுகி எனது விவசாயத்தை பாழ்படுத்தியது.

கடந்த 3 ஆண்டுகளாக மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறேன். இந்த விவசாயத்தை நம்பி வங்கியில் கடன் பெற்று உப்பு, உரம் என முதலீடு செய்தேன். ஆனால் தற்போது அனைத்தும் நாசமாகிவிட்டது. எனவே இயற்கையின் இடர்பாடுகளில் சிக்கி தவிக்கும் விவசாயிகளின் கண்ணீரை துடைக்க அரசு உடனடி நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story