விளையாட்டுக்கான உதவித்தொகை பெற ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
விளையாட்டுக்கான ஊக்க உதவித்தொகை பெற ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை,
இதுகுறித்து கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தினால் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, கல்லூரி மற்றும்பல்கலைக்கழகத்தில் படிக்கும் தலை சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்க உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் 2018-19-ம் கல்வி ஆண்டிற்கு ஊக்க உதவித்தொகை பெற விரும்புபவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஆன்-லைன் மூலம் மட்டுமே நிரப்பப்பட வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு ரூ.10ஆயிரமும், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவ-மாணவிகளுக்கு ரூ.13ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
இதற்கு கடந்த 1.7.2017 முதல் 30.6.2018 முடிய உள்ள காலக்கட்டத்தில் தேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவார். மேலும் குழுப் போட்டிகளில் முதல் 2 இடங்களையும், தனிநபர் போட்டிகளில் முதல் 3 இடங்களையும் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
அதில் தேசிய அளவிலான போட்டிகள், அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்கள், இந்திய பள்ளி விளையாட்டுக்கள் கூட்டமைப்பு, இந்திய விளையாட்டு ஆணையம், மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், அகில இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கம் ஆகியவற்றினால் நடத்தப்பட்ட போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story