தேர்வு மையத்தில் பாதுகாப்பாக வைக்க இடமில்லாததால் செல்போனை சாக்கடையில் வீசிவிட்டு பரீட்சை எழுதிய மாணவி
செல்போனை பாதுகாப்பாக வைக்க தேர்வு மையத்தில் இடம் இல்லாததால் மாணவி அதை சாக்கடையில் வீசிவிட்டு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய சம்பவம் நடந்து உள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் நேற்று முன்தினம் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி நடந்தது. இந்த தேர்வு எழுதுவதற்காக மாட்டுங்காவில் உள்ள ருயா கல்லூரிக்கு 12-ம் வகுப்பு மாணவி ஒருவள் செல்போனுடன் வந்துள்ளார்.
அந்த கல்லூரியில் செல்போனை பாதுகாப்பாக வைப்பதற்கு இடம் ஏற்பாடு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த மாணவி சிம் கார்டை எடுத்துவிட்டு அங்கு இருந்த சாக்கடையில் செல்போனை வீசிவிட்டு சென்று தேர்வை எழுதி உள்ளார்.
பொதுத்தேர்வை எழுத மாணவர்கள் நீண்ட தூரத்தில் இருந்து தேர்வு மையங்களுக்கு வருகின்றனர். அப்போது அவர்கள் பெற்றோரை தொடா்பு கொள்ள செல்போன்களை கையில் எடுத்து வருகின்றனர். ஆனால் செல்போன்களை தேர்வறைக்குள் எடுத்து செல்ல முடியாது.
எனவே மாணவர்கள் தேர்வறைக்கு வெளியே செல்போனை வைத்து செல்கின்றனர். அப்போது மாணவர்களின் செல்போன்கள் திருடு போகும் சம்பவங்கள் அதிகளவில் நடக்கின்றன. எனவே தேர்வறைக்கு வெளியே மாணவர்கள் தங்கள் உடைமைகளை வைக்க பாதுகாப்பான இடத்தை ஏற்பாடு செய்யவேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story