கூடலூரில் பிடிபட்ட சிறுத்தைப்புலி வண்டலூர் பூங்காவில் பராமரிப்பு


கூடலூரில் பிடிபட்ட சிறுத்தைப்புலி வண்டலூர் பூங்காவில் பராமரிப்பு
x
தினத்தந்தி 23 Feb 2019 10:00 PM GMT (Updated: 23 Feb 2019 8:57 PM GMT)

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 171 இனங்களில் 2,484 எண்ணிக்கையிலான பாலூட்டிகள், ஊர்வன மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

வண்டலூர்,

வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பாலூட்டிகளில் பல்வேறு வகையான மாமிச உண்ணிகள், தாவர உண்ணிகள் மற்றும் இரண்டையும் உண்ணும் விலங்குகளும் பராமரிக்கப்பட்டு இனப்பெருக்கம் செய்து வருகின்றன. கடந்த 5-ந்தேதி 3 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் சிறுத்தைப்புலி நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்தபோது வனத்துறையினர் பிடித்தனர்.

அந்த சிறுத்தைப்புலி மருத்துவ சிகிச்சைக்காக வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த பெண் சிறுத்தைப்புலி பூங்கா புனர்வாழ்வு மையத்தில் உள்ள இருப்பிடத்தில் ஊட்டியில் இருந்து வந்த 4 வயது சிறுத்தைப்புலி அருகில் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த சிறுத்தைப்புலிக்கு கோழி மற்றும் மாட்டிறைச்சி உணவாக வழங்கப்படுகிறது. இந்த சிறுத்தைப்புலியை விலங்கு மருத்துவர்கள் மற்றும் உயிரியலாளர்கள் கண்காணித்து வருகின்றனர். மேலும் இந்த சிறுத்தைப்புலியையும் சேர்த்து பூங்காவில் 4 ஆண் மற்றும் 2 பெண் சிறுத்தைப்புலிகள் உள்ளன. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story