பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: விவசாயிக்கு ஆயுள் தண்டணை திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த ஊத்துக்கோட்டை பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை கடந்த 10.4.2017 அன்று அதே பகுதியை சேர்ந்த விவசாயி ஆனந்தன் (வயது 48) என்பவர் ஆசைவார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்தார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இது குறித்து மாணவியின் தாயார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தனை கைது செய்தனர். மேலும் அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. இந்த வழக்கு திருவள்ளூரில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இதில் அரசு தரப்பு வழக்கறிஞராக தனலட்சுமி வாதாடினார். சாட்சிகளிடம் உரிய விசாரணை செய்யப்பட்டு நேற்று நீதிபதி பரணிதரன் தீர்ப்பு அளித்தார்.
நீதிபதி தனது தீர்ப்பில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக ஆனந்தனுக்கு ஆயுள் தண்டனையும், கொலை மிரட்டல் விடுத்ததற்கு ஓராண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். இதைத்தொடர்ந்து ஊத்துக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் ஆனந்தனை சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.