புதுச்சேரி சட்டசபை 2-ந்தேதி கூடுகிறது இடைக்கால பட்ஜெட்டை நாராயணசாமி தாக்கல் செய்கிறார்
புதுவை சட்டசபை வருகிற 2-ந்தேதி கூடுகிறது. இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
புதுச்சேரி,
புதுவை சட்டசபையின் குளிர்கால கூட்டம் கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி நடந்தது. அதைத்தொடர்ந்து சட்டசபை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டுவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்ய மத்திய அரசின் நீர்வளத்துறை அனுமதி அளித்ததை தொடர்ந்து அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சிறப்பு சட்டமன்ற கூட்டம் கடந்த டிசம்பர் மாதம் 14-ந்தேதி நடந்தது.
இந்தநிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வர உள்ளதால் இந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய புதுவை அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் நாராயணசாமி பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனைகள் நடத்தினார்.
இத்தகைய சூழ்நிலையில் வருகிற 2-ந்தேதி சட்ட சபையை கூட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பினை சட்டசபை செயலாளர் வின்சென்ட்ராயர் வெளியிட்டுள்ளார்.
அவர் தனது அறிவிப்பில், புதுவை சட்டசபை வருகிற மார்ச் மாதம் 2-ந்தேதி காலை 11 மணிக்கு சட்டபேரவை மண்டபத்தில் கூட்டப்படுகிறது என்று கூறியுள்ளார்.
2-ந்தேதி கூடும் சட்டமன்ற கூட்டத்தில் நிதித்துறை பொறுப்பினை வகிக்கும் முதல்-அமைச்சர் நாராயணசாமி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். குறிப்பாக ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய 4 மாதங்களுக்கு அரசின் செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீடு இந்த பட்ஜெட்டில் இடம் பெறும் என்று தெரிகிறது.
புதுவை கவர்னர் கிரண்பெடிக்கு எதிராக முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் கவர்னர் மாளிகை முன்பு 6 நாட்கள் தர்ணா போராட்டம் நடத்தியுள்ள சூழ்நிலையில் அதனால் கிடைத்த பலன் என்னென்ன? என்பன போன்ற கேள்விகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் அரசு செயல்படுத்தாத திட்டங்கள் குறித்து பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்றும் தெரிகிறது.
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டிலும் மார்ச் மாதத்தில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால் கடந்த 2011-ம் ஆண்டில் என்.ஆர்.காங்கிரஸ் பதவியேற்றது முதல் 5 ஆண்டுகளும் மார்ச் மாதத்தில் இடைக்கால பட்ஜெட்டுகளே தாக்கல் செய்யப்பட்டன. 2016-ல் காங்கிரஸ் கட்சி ஆட்சி பொறுப்புக்கு வந்த பின்னரும் அதே நிலையே தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story