பந்தலூர் அருகே சிறுத்தைப்புலி தாக்கி பசுமாடு சாவு
பந்தலூர் அருகே சிறுத்தைப்புலி தாக்கி பசுமாடு இறந்தது.
பந்தலூர்,
பந்தலூர் தாலுகா பாக்கனா பகுதியில் கடந்த சில வாரங்களாக சிறுத்தைப்புலி நடமாட்டம் இருந்து வருகிறது. அடிக்கடி ஊருக்குள் புகுந்து ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை சிறுத்தைப்புலி தாக்கி கொன்று அட்டகாசம் செய்கிறது. இதனால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த உசேன் என்பவர் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை அருகிலுள்ள புல்வெளியில் தனது மாடுகளை உசேன் மேய்ச்சலுக்கு விட்டார். சிறிது நேரம் கழித்து மாடுகள் கத்தும் சத்தம் கேட்டது. உடனே சத்தம் வந்த திசையை நோக்கி அங்கிருந்த பொதுமக்கள் சென்று பார்த்தனர். அப்போது சிறுத்தைப்புலி ஒன்று பசு மாட்டை தாக்கி கொண்டிருந்தது.
உடனே பொதுமக்கள் அங்கு ஓடி சென்று சிறுத்தைப்புலியை விரட்டினர். அப்போது சிறுத்தைப்புலி பசு மாட்டை விட்டுவிட்டு, வனப்பகுதிக்குள் தப்பி ஓடியது. இதற்கிடையில் படுகாயம் அடைந்த பசுமாடு இறந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பிதிர்காடு வனச்சரகர் மனோகரன், வன காப்பாளர்கள் மோகன்ராஜ், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.
பின்னர் கால்நடை டாக்டர் நந்தினி வரவழைக்கப்பட்டு, பசு மாட்டின் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது சிறுத்தைப்புலி தாக்கி பசுமாடு இறந்தது உறுதி செய்யப்பட்டது. இதனிடையே அட்டகாசம் செய்யும் சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று வனத்துறைக்கு பொதுமக்கள் கோரி க்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story