கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் பெண்களை சோதனை செய்ய தனிக்கூண்டு அமைப்பு அசம்பாவித சம்பவங்களை தடுக்க நடவடிக்கை


கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் பெண்களை சோதனை செய்ய தனிக்கூண்டு அமைப்பு அசம்பாவித சம்பவங்களை தடுக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 28 Feb 2019 4:00 AM IST (Updated: 28 Feb 2019 3:03 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வருகின்ற பெண்களை சோதனை செய்ய நுழைவு வாயில் அருகில் தனியாக கூண்டு அமைக்கப்பட்டு உள்ளது. தீக்குளிப்பு போன்ற அசம்பாவித சம்பவங்களை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

நெல்லை,

தென்காசி அருகே உள்ள காசிதர்மத்தை சேர்ந்த இசக்கிமுத்து என்ற கூலி தொழிலாளி நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கந்து வட்டி கொடுமையால் கடந்த 23-10-2017 அன்று குடும்பத்துடன் தீக்குளித்தார். தீக்காயம்பட்ட இசக்கிமுத்து, அவரது மனைவி சுப்புலட்சுமி மற்றும் 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிரதானவாசலும், ஜெயில் அருகில் உள்ள வாசலும் தவிர மற்ற அனைத்து வாசல்களும் அடைக்கப்பட்டன.

கலெக்டர் அலுவலகத்தின் 2 வாசல்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளே செல்கிறவர்கள் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவார்கள். இதனால் கலெக்டர் அலுவலகத்திற்குள் யாரும் பாட்டில் மற்றும் மருந்து மாத்திரைகள் கொண்டு செல்ல போலீசார் தடை செய்து உள்ளனர்.

இந்தநிலையில் கடந்த 25-ந்தேதி நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்க வந்த தென்காசியை சேர்ந்த ராஜம்மாள்(வயது65) என்பவர் கலெக்டர் அலுவலகத்தின் வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கத்தின் பின்வாசல் அருகில் தனது கையில் வைத்திருந்த 6 சிறிய பாட்டில்களில் இருந்த மண்எண்ணெய்யை தன் உடலில் ஊற்றி தீவைக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதை தடுத்து நிறுத்தினார்கள். கலெக்டர் அலுவலக வளாகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பலத்த சோதனைக்கு பிறகு பொதுமக்கள் உள்ளே அனுமதிக்கின்ற நிலையில் உள்ளே ராஜம்மாள் எப்படி மண்எண்ணெயை கொண்டு சென்றார். போலீசார் ஒழுங்காக வேலை செய்கிறார்களா? என்று அதிகாரிகள் கேட்டனர். மேலும் கடந்த 25-ந்தேதி கலெக்டர் அலுவலகத்தில் பணியில் இருந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வருவாய்த்துறையின் மூலம் தகவல் வந்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதையொட்டி நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வருகின்ற அனைவரையும் சோதனை நடத்திய பிறகே உள்ளே அனுமதிக்கவேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்திற்கு வருகின்ற பெண்களை சோதனை நடத்த நுழைவு வாயில் அருகில் ஒரு தனிக்கூண்டு அமைக்கப்பட்டு உள்ளது. நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பெண்களை போலீஸ் ஏட்டு கிருஷ்ணவேணி தலைமையில் பெண் போலீசார் அந்த கூண்டில் வைத்து சோதனை நடத்திய பிறகே உள்ளே அனுமதித்தனர். இந்த சோதனையை பற்றி சில பெண்கள் கூறுகையில், நகை கடையில் வேலை பார்க்கும் ஊழியர்களை நடத்துகின்ற சோதனையை விட அதிகமான சோதனையாக உள்ளது என்றனர். 

Next Story