முக்கொம்பில் கொள்ளிடம் அணை கட்டுமான பணிகளை தொடங்க வேண்டும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்
முக்கொம்பில் கொள்ளிடம் அணை கட்டுமான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்று விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருச்சி,
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி, வேளாண் இணை இயக்குனர் பால்ராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) சாந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விசுவநாதன் பேசுகையில், “முக்கொம்பு கொள்ளிடம் அணை கட்டுமான பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட சின்ன வெங்காய சாகுபடி விவசாயிகளுக்கும், மக்காச்சோளம் விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். ஏரிகள் மற்றும் பாசன வாய்க்கால்கள் மழைக்கு முன்பாக தூர்வாரப்பட வேண்டும்” என்றார்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு பேசும்போது, “கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் தர்ப்பூசணி பழங்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது. கடையில் தர்ப்பூசணி கிலோ ரூ.32-க்கு விற்கப்படுகிறது. ஆனால் விவசாயிகளிடம் கிலோ ரூ.4-க்கு மட்டுமே கேட்கப்படுகிறது. இதனால் தர்ப்பூசணி விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். ஆகவே தர்ப்பூசணி விவசாயிகளை காக்க வேண்டும். வறட்சி மற்றும் கஜா புயலால் விவசாயிகள் பாதிக்கப் பட்டுள்ளதால் விவசாயிகளின் நகைகளை ஏலம் விடுவதை தேர்தல் முடியும் வரை வங்கிகள் தள்ளி வைக்க வேண்டும்” என்று கூறினார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அயிலை சிவ.சூரியன் பேசுகையில், “கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை கைவிட கோரியும், காவிரி மேலாண்மை வாரியத்துக்கு நிரந்தர தலைவரை நியமிக்கவும் இந்த கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என்றார். கிராமங்களில் பயிர்களுக்கு ஊக்க மருந்துகளை சிலர் சட்டவிரோதமாக விற்பனை செய்கிறார்கள். ஆகவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினார்கள். அப்போது, இது குறித்து விசாரித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் சிவராசு கூறினார். கூட்டத்தில் அய்யன் வாய்க்கால் பாசனதாரர் சங்க ஒருங்கிணைப்பாளர் வீரசேகரன் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.
Related Tags :
Next Story