விழுப்புரம்-புதுச்சேரி இடையே நவீன எந்திரம் மூலம் தண்டவாளம் சீரமைப்பு ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க நடவடிக்கை
விழுப்புரம்-புதுச்சேரி இடையே நவீன எந்திரம் மூலம் தண்டவாளம் சீரமைக்கப்பட்டு வருகிறது. ரெயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்காக இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
புதுச்சேரி,
புதுச்சேரி ரெயில் நிலையத்தில் இருந்து விழுப்புரம், சென்னை, திருப்பதி, மங்களூரு, கன்னியாகுமரி, டெல்லி, ஹவுரா, புவனேஸ்வர், சந்திரகாசி, தாதர், யஷ்வந்த்பூர் உள்பட பகுதிகளுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் புதுச்சேரிக்கும் ஏராளமான ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ரெயில்கள் அடிக்கடி வருவதால் தண்டவாளத்தில் அதிர்வு ஏற்பட்டு விரிசல் ஏற்படும். இதை கண்காணிக்க புதுச்சேரி-விழுப்புரம் இடையே தண்டவாளத்தை அளவீடு செய்யும் பணி நடைபெற்றது.
அதன்தொடர்ச்சியாக தற்போது நவீன எந்திரம் மூலம் தண்டவாளம் சீரமைக்கப்பட்டு வருகிறது. அதாவது, விழுப்புரம்-புதுச்சேரி ரெயில் நிலையங்கள் இடையே உள்ள வளவனூர், சின்னபாபுசமுத்திரம், வில்லியனூர் ஆகிய இடங்களில் நவீன எந்திரம் மூலம் தண்டவாளம் சீரமைக்கப்பட்டது. ரெயில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் இரவு நேரங்களில் தான் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விழுப்புரத்தில் இருந்து கண்டமங்கலம் வரை இந்த பணி முடிந்துள்ளது. இதையடுத்து வில்லியனூர், புதுச்சேரி வரை தண்ட வாளம் சீரமைப்பட உள் ளது. இந்த பணிகள் ஒரு வார காலத்திற்குள் முடிவடையும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த பணிகள் குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘புதுச்சேரியில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தண்டவாளத்தின் உறுதித்தன்மை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ரெயில்கள் அடிக்கடி சென்று வருவதால் ஏற்பட்ட அதிர்வு காரணமாக தண்டவாளத்தில் விரிசல் உள்ளதா என ஆய்வு செய்தனர். பழைய ஜல்லிகளை நீக்கி புதிய ஜல்லிகளை கொட்டி சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடிந்ததும் ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்படும்’ என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story