நெல்லை மாவட்டத்தில் 39,457 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர்


நெல்லை மாவட்டத்தில் 39,457 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர்
x
தினத்தந்தி 2 March 2019 3:00 AM IST (Updated: 2 March 2019 2:10 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் 39 ஆயிரத்து 457 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வை எழுதினார்கள். தமிழ் முதல்தாள் எளிதாக இருந்ததாக மாணவிகள் தெரிவித்தனர்.

நெல்லை,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று தமிழ் முதல்தாள் தேர்வு நடந்தது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை, சேரன்மாதேவி, தென்காசி, வள்ளியூர், சங்கரன்கோவில் என 5 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இந்த கல்வி மாவட்டங்களில் பிளஸ்-2 தேர்வு எழுத 137 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

சேரன்மாதேவி கல்வி மாவட்டத்தில் 19 மையங்களில் 2 ஆயிரத்து 548 மாணவர்களும், 3 ஆயிரத்து 478 மாணவிகளும் என மொத்தம் 6 ஆயிரத்து 26 பேரும், தென்காசி கல்வி மாவட்டத்தில் 31 மையங்களில் 4 ஆயிரத்து 58 மாணவர்களும், 5 ஆயிரத்து 120 மாணவிகளும் என மொத்தம் 9 ஆயிரத்து 178 பேரும் தேர்வு எழுதினார்கள்.

நெல்லை கல்வி மாவட்டத்தில் 33 மையங்களில் 4 ஆயிரத்து 600 மாணவர்களும், 6 ஆயிரத்து 78 மாணவிகளும் என மொத்தம் 10 ஆயிரத்து 678 பேரும், வள்ளியூர் கல்வி மாவட்டத்தில் 30 மையங்களில் 3 ஆயிரத்து 151 மாணவர்களும், 3 ஆயிரத்து 908 மாணவிகளும் என மொத்தம் 7 ஆயிரத்து 59 பேரும், சங்கரன்கோவில் கல்வி மாவட்டத்தில் 24 மையங்களில் 3 ஆயிரத்து 13 மாணவர்களும், 3 ஆயிரத்து 503 மாணவிகளும் என மொத்தம் 6 ஆயிரத்து 516 பேரும் தேர்வு எழுதினார்கள்.

நெல்லை மாவட்டத்தில் 318 மேல்நிலைப்பள்ளிக்கூடங்களில் பயிலும் மொத்தம் 39 ஆயிரத்து 457 மாணவ-மாணவிகள் நேற்று பிளஸ்-2 தேர்வை எழுதினார்கள். இதில் 17 ஆயிரத்து 370 மாணவர்களும், 22 ஆயிரத்து 87 மாணவிகளும் அடங்குவர். 148 மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளும் தேர்வு எழுதினார்கள். அவர்கள் சொல்வதை எழுத ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

தேர்வை கண்காணிக்க 137 முதன்மை கண்காணிப்பாளர்கள், 13 கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்கள், 137 துறை அலுவலர்கள், 2 ஆயிரத்து 298 அறை கண்காணிப்பாளர்கள், 297 நிலையான பறக்கும் படை உறுப்பினர்கள், கல்வித்துறை ஆய்வு அலுவலர்கள் தலைமையில் 10 பறக்கும் படை குழுக்கள், 25 வழித்தட அலுவலர்கள் தேர்வை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் ஷில்பா ஆய்வு செய்தார். அப்போது முதன்மை கல்வி அலுவலர் பாலா, தேர்வு குழு ஒருங்கிணைப்பாளர்கள் தேவபிச்சை, கணேசன் மற்றும் கல்வி அதிகாரிகள் உடன் இருந்தனர். தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடந்தது. தேர்வு எழுதி விட்டு மாணவ-மாணவிகள் உற்சாகமாக வெளியே வந்தனர்.

நெல்லை டவுன் கல்லணை மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் காந்திமதி, சத்யா ஆகியோர் கூறும்போது, “தமிழ் முதல்தாள் எளிதாக இருந்தது. தினமும் ஆசிரியர்கள் வழிகாட்டுதலின்படி பாடங்கள் படித்து வந்தோம். நாங்கள் படித்த பாடங்களில் இருந்து கேள்வி வந்து இருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது“ என்றனர்.

தேர்வு மையங்களுக்கு குடிநீர், தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. மேலும் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. 

Next Story