பச்சை குத்திய வாலிபர் சாவு


பச்சை குத்திய வாலிபர் சாவு
x
தினத்தந்தி 3 March 2019 3:45 AM IST (Updated: 3 March 2019 2:16 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிக்கரணையில் பச்சை குத்திய வாலிபர் உயிரிழந்தார்.

ஆலந்தூர்,

சென்னை திருமுல்லைவாயல் செந்தில் நகர் மகாத்மா காந்தி தெருவை சேர்ந்தவர் ஜெகன் (வயது 26). பி.எஸ்சி. படித்துள்ளார். இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு துபாயில் வேலை கிடைத்தது. ஆனால் அந்த வேலை பிடிக்காததால் கடந்த மாதம் (பிப்ரவரி) 17-ந் தேதி இந்தியா திரும்பினார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை பச்சை குத்த நண்பர்களுடன் பள்ளிக்கரணை செல்வதாக தனது பெற்றோரிடம் சொல்லி விட்டு சென்றார். நண்பர்கள் 4 பேருடன் பள்ளிக்கரணை பிள்ளையார் கோவில் தெருவிற்கு ஜெகன் சென்றார். அங்கு உள்ள பச்சை குத்தும் கடையில் இரவு 8 மணி அளவில் பச்சை குத்தி முடிந்த நிலையில் இருக்கையில் அமர்ந்திருந்த ஜெகனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

உடனடியாக நண்பர்கள் அவரை அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி ஜெகன் இறந்தார். சம்பவம் குறித்து பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து பச்சை குத்தியதில் ஏற்பட்ட ஒவ்வாமையால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பின்னரே ஜெகன் இறந்ததற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Next Story