கடலூர் பஸ் நிலையத்தில் பரபரப்பு, ரூ.2 ஆயிரம் கள்ளநோட்டுகளுடன் பட்டதாரி பெண் சிக்கினார்
கடலூர் பஸ் நிலையத்தில் ரூ.2 ஆயிரம் கள்ளநோட்டுகளுடன் பட்டதாரி பெண் சிக்கினார். மேலும் தப்பி ஓடிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த பரபரப்பு சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
கடலூர்,
கடலூர் அருகே உள்ள பழைய வண்டிப்பாளையத்தை சேர்ந்த கொளஞ்சி மனைவி தமிழரசி(வயது 36), கடலூர் முதுநகர் அருகே உள்ள சேடப்பாளையத்தை சேர்ந்த ரஜினி மனைவி குமுதா. இவர்கள் இருவரும் கடலூர் பஸ்நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பறை அருகில் பழ வியாபாரம் செய்து வருகிறார்கள்.
வழக்கம்போல நேற்றும் அவர்கள் பழ வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். பகல் 1 மணியளவில் சுடிதார் அணிந்து ‘டிப்டாப்’பாக வந்த ஒரு பெண் குமுதாவிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்து சில்லரை கேட்டார். ஆனால் அவர் இல்லை என்று கூறினார். இதையடுத்து அவருக்கு பக்கத்தில் இருந்த தமிழரசியிடம் சில்லரை கேட்டார். அந்த ரூபாய் நோட்டை வாங்கி பார்த்தபோது அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
உடனே தமிழரசி அந்த பெண்ணிடம் தனக்கு தெரிந்த நபரிடம் சில்லரை வாங்கி வருவதாக கூறிவிட்டு அவரும், குமுதாவும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை எடுத்துக்கொண்டு அங்குள்ள புறக்காவல் நிலையத்துக்கு சென்று போலீஸ்காரர்களிடம் காண்பித்தனர். அந்த ரூபாய் நோட்டை வாங்கி பார்த்தபோலீசார் அது கள்ள ரூபாய் நோட்டு என்பதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து கள்ள ரூபாய் நோட்டை மாற்ற முயன்ற பெண்ணை பிடிக்க போலீசார் முடிவு செய்தனர். இதுபற்றி தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரய்யா, சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல், போலீஸ்காரர் திருமாவளவன், ஊர்காவல் படை வீரர் முகுந்தன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, கள்ள நோட்டு வைத்திருந்த பெண்ணை பிடிக்க முயன்றனர்.
ஆனால் போலீசார் வருவதை அறிந்த அந்த பெண் அங்கிருந்து திடீரென தலைமறைவானார். உடனே போலீசார் அந்த பெண்ணை பஸ் நிலையம் முழுவதும் தேடினர். அப்போது கடலூரில் இருந்து பண்ருட்டி செல்லும் டவுண் பஸ்சில் அந்த பெண் அமர்ந்திருப்பதை போலீசார் பார்த்தனர். அந்த பெண்ணை போலீசார் பிடித்து திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் சிதம்பரம் மாரியப்பாநகர், 3-வது குறுக்குதெருவை சேர்ந்த நந்தகுமார் மனைவி பரணிகுமாரி(வயது 35) என தெரியவந்தது. அவரது கையில் ரூ.70 ஆயிரத்து 500-க்கு கள்ள நோட்டுகள் இருந்தன. அவை 2 ஆயிரம் ரூபாய், 500 ரூபாய், 200 ரூபாய் நோட்டுகளாக இருந்தது போலீசார் விசாரணையில் தெரிந்தது. மேலும் அவரிடம் 15 ஏ.டி.எம். கார்டுகள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பரணிகுமாரியிடம் தொடர்ந்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பரணிகுமாரியுடன் மேலும் 2 பெண்களும், ஒரு ஆண் நபரும் கடலூர் வந்துள்ளனர். அவர்களும் கையில் பல ஆயிரம் மதிப்பிலான கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவதற்காக வைத்துள்ளனர். பரணிகுமாரி போலீசாரிடம் பிடிபட்ட தகவல் அறிந்ததும் அவர்கள் தலை மறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். விசாரணைக்கு பிறகு மேலும் பல திடுக்கிடும் தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பரணிகுமாரி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டப்படிப்பு படித்துள்ளார். இவருக்கு ரூபிகா, சிவப்பிரியா என்ற 2 மகள்கள் உள்ளனர். கடலூர் பஸ்நிலையத்தில் கள்ள ரூபாய் நோட்டுகளுடன் பட்டதாரி பெண் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story