ரேஷன் கார்டுகளில் திருத்தம் செய்ய தனியார் இ-சேவை மையங்களில் அதிக கட்டணம்
கம்பத்தில் ரேஷன் கார்டுகளில் திருத்தம் செய்ய தனியார் இ-சேவை மையங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கம்பம்,
கம்பத்தில் 3 மகளிர் நியாய விலைக்கடை உள்பட 21 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. இவர்களுக்கு கடை எண் பிரிக்கப்பட்டு பொருட்கள் வழங்கப்படுகின்றன. மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்த, ஸ்மார்ட் ரேஷன் கார்டு உதவியாக இருக்கும் என்பதால், பொது வினியோகத் திட்டத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை தமிழக அரசு முறைப்படுத்தி வருகிறது.
இந்த ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்கல் உள்ளிட்டவைகளை குறைந்த கட்டணத்தில் அரசு இ-சேவை மையங்கள் மற்றும் அரசு அனுமதி பெற்ற தனியார் இ-சேவை மையங்கள் மூலம் திருத்திக்கொள்ளலாம் என அரசு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியிருந்தது. அதன்படி பயனாளிகள் புகைப்படம், ஆதார் அட்டை, பான்கார்டு, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களை இணைத்து, அரசு இ-சேவை மையங்கள் மற்றும் தனியார் இ-சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கு இ-சேவை மையங்களில் குறைந்தபட்சமாக ரூ20 முதல் ரூ.60 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் இடைத்தரகர்கள் தலையீட்டால் சில தனியார் இ-சேவை மையங்களில் பொதுமக்களிடம் இருந்து ரூ.100 முதல் ரூ.300 வரை அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மக்களின் கட்டாய தேவையை புரிந்து கொண்டு, 5 மடங்கு அதிகமாக கட்டணம் வசூலிப்பதால், ஏழை மக்கள் கடும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர். மேலும் ஒரு ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள புகைப்படம், முகவரி மாற்றம், பெயர் திருத்தம், பெயர் சேர்த்தல், நீக்குதல் ஆகியவற்றிற்கு தனித்தனியே கட்டணம் வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தனியார் இ-சேவை மையங்களில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து உத்தமபாளையம் வட்ட வழங்கல் அலுவலர் மோகன் முனியாண்டி கூறும்போது, ரேஷன் கார்டுகளில் உள்ள தவறுகளை அரசு அனுமதி வழங்கப்பட்ட இ-சேவை மையங்களில் திருத்தம் செய்ய வேண்டும். மேலும் இ-சேவை மையங்களில் அரசு அனுமதித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் மாவட்ட நிர்வாகத்திற்கும், தாசில்தார் அலுவலகத்துக்கும் தகவல் கொடுக்கலாம் என்றார்.
Related Tags :
Next Story