விபத்து இல்லாத மாவட்டமாக சேலத்தை உருவாக்க நடவடிக்கை கலெக்டர் ரோகிணி தகவல்
விபத்து இல்லாத மாவட்டமாக சேலத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட கலெக்டர் ரோகிணி தெரிவித்துள்ளார்.
சேலம்,
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் ரோகிணி கலந்து கொண்டு பேசியதாவது:-
சேலம் மாவட்டத்தில் சாலைகளை மேம்படுத்துவதற்கும், சாலை பாதுகாப்பிற்கும் முதல்-அமைச்சர் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. துறை அலுவலர்கள் சாலை பாதுகாப்பு குறித்து பங்களிப்பு மற்றும் கடமைகளை உணர்ந்து பணியாற்றினால் சாலை விபத்துகளை முழுமையாக தடுக்க முடியும்.
மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சாலை பாதுகாப்பு குறித்து தொடர்ந்து ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு டிரைவர்களின் பொறுப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு உள்ளது. பல்வேறு விதமான காரணங்கள் மூலம் விபத்துகள் நடைபெறுகின்றன. அத்தகைய காரணங்கள் என்னவென்று ஆராய்ந்தால் மட்டுமே விபத்துகளை தடுக்க முடியும்.
தமிழ்நாடு அரசு சிறப்பான சாலை உள்கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் சாலை பாதுகாப்பு கட்டமைப்பு குறித்து அனைத்து விதிமுறைகளை முழுமையாக வாகன ஓட்டிகளுக்கு தெரிவிப்பதற்கு ஏதுவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன்படி, முக்கிய சாலைகளில் நல்ல வெளிச்சம், வேகத்தடை, சாலை தடுப்புகள், டிரைவர்களின் உரிமம், வேகத்தடைகள் அமைக்க வேண்டிய இடம், முக்கிய பகுதிகளில் அதிக வெளிச்சம் கொண்ட விளக்குகள் பொருத்துதல், தலைக்கவசம் அணிதல் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஒவ்வொரு மாதமும் சாலை பாதுகாப்பு குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
விபத்து இல்லாத மாவட்டமாகவும், போக்குவரத்து நெரிசல் இல்லாத மாவட்டமாகவும் சேலத்தை உருவாக்க முதல்-அமைச்சர் ரூ.3 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார். சேலம் மாவட்டத்தில் அதிக விபத்துகள் ஏற்படும் இடங்கள் கண்டறியப்பட்டு அத்தகைய இடங்களில் இந்த நிதியை பயன்படுத்தி சாலையோர விளக்குகள், வேகத்தடை, சாலை மைய தடுப்பு சுவர்கள், கூடுதல் சைகை விளக்குகள் மற்றும் பல்வேறு விதமான சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளன.
டிரைவர்கள் வாகனத்தை இயக்குவதற்கு முன்பு சாலை பாதுகாப்பு விதிமுறைகளை முழுமையாக கடைபிடிப்போம் என்ற உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு வாகனங்களை இயக்க வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அறிவுரைகள் வழங்க வேண்டும். காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை, கல்வித்துறை, போக்குவரத்துத்துறை, வருவாய் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்றினால் விபத்துகளை முழுமையாக குறைக்க முடியும். அவ்வாறு ஒருங்கிணைந்து செயல்பட்டால் சேலம் மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக உருவாக்க முடியும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார். ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொ) ரவிச்சந்திரன் உள்பட வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story