திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகாசிவராத்திரி லட்சார்ச்சனை விழா பக்தர்கள் விடிய, விடிய சாமி தரிசனம்


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகாசிவராத்திரி லட்சார்ச்சனை விழா பக்தர்கள் விடிய, விடிய சாமி தரிசனம்
x
தினத்தந்தி 5 March 2019 4:30 AM IST (Updated: 4 March 2019 9:30 PM IST)
t-max-icont-min-icon

மகாசிவராத்திரியையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் விடிய விடிய சிறப்பு பூஜைகள் நடந்தன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை,

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மகாதீபம் உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் நடைபெறுகின்றன. இங்கு மகாசிவராத்திரியன்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

திருமாலும், பிரம்மாவும் அடி முடி காணாமல் திகைத்தபோது லிங்கோத்பவ மூர்த்தியாக அருணாசலேஸ்வரர் அருள்பாலித்த திருநாளே மகா சிவராத்திரி என்று கூறப்படுகிறது. அதனால் மகா சிவராத்திரி உருவான திருத்தலம் என்ற தனிச் சிறப்பையும் பெற்றது திருவண்ணாமலை.

மகாசிவராத்திரி விழாவின்போது பக்தர்கள், கோவில் வளாகத்தில் வண்ண வண்ண உப்பு கோலங்கள் வரைந்து, கோவில் வளாகம் முழுவதும் விளக்கு ஏற்றி வழிபடுவார்கள். நேற்று மகாசிவராத்திரியையொட்டி அதிகாலை 5 மணி முதல் பகல் 12 மணி வரை லட்சார்ச்சனை நடைபெற்றது. கோவில் கொடிமரத்தின் அருகில் சோளம், அன்னாசி பழம் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து சென்றனர். பெரும்பாலான பக்தர்கள் 3-வது பிரகாரத்தை சுற்றிவந்து வணங்கினர்.

சிலர் நேர்த்தி கடனாக 108 முறை 3-வது பிரகாரத்தில் வலம் வந்தனர். இரவு 7.30 மணிக்கு முதல்கால பூஜையும், 11.30 மணிக்கு இரண்டாம்கால பூஜையும், 2 மணிக்கு மூன்றாம் கால பூஜையும், அதிகாலை 4.30 மணிக்கு நான்காம்கால பூஜையும் நடந்தது. முதல் கால பூஜையை பிரம்மாவும், 2-ம் கால பூஜையை திருமாலும், 3-ம் கால பூஜையை உமையாளும், 4-ம் கால பூஜையை முப்பத்து முக்கோடி தேவர்களும் செய்ததாக ஐதீகம் உள்ளது.

நள்ளிரவு 12 மணிக்கு சாமி சன்னதியின் பின்பகுதியில் அமைந்துள்ள லிங்கோத்பவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இந்த பூஜையில் மட்டும் தாழம்பூ பயன்படுத்தப்படும். பின்னர் தீபாராதனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் கோவில் வளாகம், ஆயிரங்கால் மண்டபம், கிளிகோபுர வளாகத்தில் தீபங்கள் ஏற்றப்பட்டது. தீ விபத்து போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விடியவிடிய பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

நிகழ்ச்சியை முன்னிட்டு கிரிவல நாதஸ்வர தவில் இசை சங்கத் தலைவர் பிச்சாண்டி தலைமையில் நேற்று காலை 5 மணிக்கு தொடங்கிய இசை விழா விடிய விடிய நடைபெற்றது. இதில் மதியம் 12 மணியளவில் நாதஸ்வரம் , தவில் இசை க்கலைஞர்கள் பலர் கலந்து கொண்டு அருணாசலேஸ்வரருக்கு ராகம் கம்பீர நடையில் வாசித்தனர். இதில் சேலம், புதுச்சேரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் கோவிலில் உள்ள கலையரங்கத்தில் மாலை 4 மணி முதல் தேவாரப் பாடல்கள் இன்னிசை, பாரத நாட்டியம் என தொடர்ந்து நள்ளிரவு 1 மணி வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் அலுவலர்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.

Next Story