பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி 42 ஆயிரம் கிலோ மீட்டர் கார் பயணம் கோவை பெண் சாதனை


பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி 42 ஆயிரம் கிலோ மீட்டர் கார் பயணம் கோவை பெண் சாதனை
x
தினத்தந்தி 5 March 2019 4:30 AM IST (Updated: 5 March 2019 12:12 AM IST)
t-max-icont-min-icon

பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி 42 ஆயிரம் கிலோ மீட்டர் காரில் பயணம் செய்து கோவையை சேர்ந்த பெண் சாதனை படைத்துள்ளார்.

கும்பகோணம்,

கோவையை சேர்ந்தவர் சங்கீதா ஸ்ரீதர்(வயது 52). ஏமன் நாட்டில், அந்நாட்டு அரசின் இணையதள ஆலோசகராக 22 ஆண்டுகள் பணியாற்றி உள்ள இவர், தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு தற்போது பெண்கள் தனியாக சென்றால் எதையும் சாதிக்கலாம் என்பதை உணர்த்தும் விதமாகவும், பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாகவும் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இதற்காக அவர் இந்தியாவில் இதுவரை 42 ஆயிரம் கிலோ மீட்டர் தனியாக காரில் பயணம் செய்து சாதனை படைத்துள்ளார். கடந்த ஆண்டு(2018) ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி மும்பையில் தனது பயணத்தை தொடங்கிய அவர், காரை தானே ஓட்டிக்கொண்டு பல்வேறு மாநிலங்களில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

நேற்று தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வந்த அவர், பெண்கள் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஏமன் நாட்டில் வேலை பார்த்தபோது இந்தியாவின் கலாசாரம், பண்பாடுகள் மீது ஈர்ப்பு ஏற்பட்டதால் எனது வேலையை ராஜினாமா செய்து விட்டேன். உலகின் பல்வேறு நாடுகளில் பயணம் செய்து இருக்கிறேன். இந்தியா போன்று ஒரு நாட்டை பார்க்க முடியாது. தற்போது காஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில் தனியாக காரை ஓட்டி பயணம் மேற்கொண்டேன். அங்கு பெண்களுக்கான பாதுகாப்பு நன்றாக உள்ளது. பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்துவதற்காக துணைக்கு ஆள் இல்லாமல் நானே சொந்தமாக காரை ஓட்டி வருகிறேன்.

பெண்களுக்கு தைரியத்தை ஏற்படுத்துவதற்காக இரவில் காரிலேயே தங்குகிறேன். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பெண்களின் பாதுகாப்பு நன்றாக உள்ளது. எனது காரில் உள்ள அனைத்து பொருட்களும் உள் நாட்டிலேயே தயார் செய்யப்பட்டது. நம் நாட்டின் தொழில் நுட்ப வளர்ச்சியை வெளிப்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கம் ஆகும்.

கும்பகோணத்தில் உள்ள கோவில்களின் கட்டிடக்கலை, கும்பகோணம் வெற்றிலை சீவல், காபி, மடிசார் புடவை ஆகியவை என்னை மிகவும் ஈர்த்துள்ளன. இதன் சிறப்பு பற்றி மற்ற நாட்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன். அப்போதுதான் நம் நாட்டின் சுற்றுலாத்துறை மேன்மை அடையும். இந்தியாவின் தனித்தன்மையை உலகம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story