அரசு பஸ் மீது கார் மோதியது ஒரே குடும்பத்தை சோ்ந்த 5 பேர் பலி கோவிலுக்கு சென்று திரும்பியபோது சோகம்


அரசு பஸ் மீது கார் மோதியது ஒரே குடும்பத்தை சோ்ந்த 5 பேர் பலி கோவிலுக்கு சென்று திரும்பியபோது சோகம்
x
தினத்தந்தி 6 March 2019 4:45 AM IST (Updated: 6 March 2019 2:38 AM IST)
t-max-icont-min-icon

அரசு பஸ் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியானார்கள். அவர்கள் சிவராத்தியையொட்டி, கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது இந்த சோக சம்பவம் நடந்தது.

பெங்களூரு, 

அரசு பஸ் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியானார்கள். அவர்கள் சிவராத்தியையொட்டி, கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது இந்த சோக சம்பவம் நடந்தது.

அரசு பஸ் மீது மோதிய கார்

பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா பட்டரஹள்ளி கிராமத்தின் வழியாக செல்லும் ஹாசன்-பெங்களூரு நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பு சுவரில் மோதி மறுபுறத்தில் செல்லும் சாலையில் வந்த கர்நாடக அரசு பஸ் மீது பயங்கரமாக மோதியது.

இதில் கார் உருக்குலைந்தது. அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்தது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். இதுபற்றி அறிந்தவுடன் நெலமங்களா போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

5 பேர் பலி

அவர்கள் விபத்துக்குள்ளான காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, காரில் பயணித்த 5 பேரும் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கினர்.

இந்த விசாரணையின்போது விபத்தில் சிக்கி இறந்தவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மேலும் இறந்தவர்கள் பெங்களூரு நாயண்டஹள்ளி அருகே உள்ள பந்தரபாளையாவை சேர்ந்த ஏழுமலை (வயது 43), அவருடைய மனைவி கமலா (35), இந்த தம்பதியின் மகன்களான கிரீதர் (14), கிரண் (13), மகள் கீதா (10) என்பது தெரியவந்தது. காரை ஏழுமலை ஓட்டியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கோவிலுக்கு சென்று திரும்பியபோது...

நேற்று முன்தினம் சிவராத்திரி என்பதால் ஏழுமலை தனது குடும்பத்தினருடன் காரில் ஆதிசுஞ்சனகிரி மடம் மற்றும் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு இரவில் வீடு திரும்பியபோது விபத்தில் சிக்கி இறந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் இந்த விபத்தில் சிக்கிய அரசு பஸ் பெங்களூருவில் இருந்து மணிப்பால் நோக்கி சென்றதும், அரசு பஸ் டிரைவரும், கண்டக்டரும் காயம் அடைந்து நெலமங்களா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது. விபத்தின்போது பஸ்சில் 31 பயணிகள் இருந்தனர். அதிர்ஷ்டவசமாக பஸ்சில் இருந்த பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று கர்நாடக அரசு போக்கு வரத்து கழகம் கூறியுள்ளது. இதுகுறித்து நெலமங்களா போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story