சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 12 ஆண்டு சிறை - கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 12 ஆண்டு சிறை - கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 6 March 2019 11:00 PM GMT (Updated: 2019-03-07T01:54:29+05:30)

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

கடலூர், 

சிதம்பரம் அருகே உள்ள மதுராந்தகநல்லூர் அழகானந்தம் தெருவை சேர்ந்தவர் குண்டா என்கிற முருகவேல்(வயது 29). இவருக்கும், இவருடைய மனைவிக்கும் குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதனால் கணவருடன் கோபித்துக்கொண்டு அவர், பிரிந்து சென்று விட்டார்.

இந்த நிலையில் கடந்த 4.8.2015 அன்று அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி முருகவேலின் தங்கையை பார்த்துவருவதற்காக அவரது வீட்டுக்கு வந்தார். அப்போது அங்கிருந்த முருகவேல், சிறுமியிடம் எனது மனைவி என்னை விட்டு பிரிந்து சென்று விட்டாள். நான் உன்னை திருமணம் செய்துகொள்கிறேன் என்று திருமண ஆசைகாட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

கடந்த 29.9.2015 அன்று இரவு வீட்டின் பின்புறம் உள்ள குளக்கரைக்கு சிறுமியை அழைத்து சென்று முருகவேல் மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் சிறுமியிடம் தனது நண்பர் வீட்டில் தங்கி இருக்குமாறும், மறுநாள் வந்து அழைத்து செல்வதாகவும் கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.ஆனால் அவர், மறுநாள் வந்து சிறுமியை அழைத்துச்செல்லவில்லை. இதையடுத்து சிறுமி தனது தந்தையிடம் நடந்த சம்பவத்தை கூறி அழுதாள். இது குறித்து சிறுமி கொடுத்த புகாரின் பேரில் ஒரத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகவேலை கைது செய்தனர். மேலும் கடலூர் மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி குற்றவாளி முருகவேலுக்கு 12 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி லிங்கேஸ்வரன் தீர்ப்பு கூறினார்.

இதையடுத்து முருகவேல், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செல்வப்பிரியா ஆஜர் ஆனார்.

Next Story