கர்நாடகாவில் கொத்தடிமையாக இருந்த விழுப்புரத்தை சேர்ந்த 8 குழந்தைகள் மீட்பு


கர்நாடகாவில் கொத்தடிமையாக இருந்த விழுப்புரத்தை சேர்ந்த 8 குழந்தைகள் மீட்பு
x
தினத்தந்தி 6 March 2019 10:45 PM GMT (Updated: 2019-03-07T04:07:24+05:30)

கர்நாடகாவில் கொத்தடிமையாக இருந்த விழுப்புரத்தை சேர்ந்த 8 குழந்தைகள் மீட்கப்பட்டனர்.

விழுப்புரம்,

மரக்காணத்தை சேர்ந்த சந்திரன், ஏழுமலை, பழனி, கோட்டிக்குப்பத்தை சேர்ந்த துரை, முருகேசன், சுப்புராயன், கோபால், கணேசன் ஆகிய 8 குடும்பங்களை சேர்ந்த 21 பேர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இடைத்தரகர்கள் சிலரால் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் ராஜகவுடா என்ற கிராமத்தில் கரும்பு வெட்டும் வேலைக்கு சென்றனர். இவர்களில் 8 குழந்தைகளும் அடங்குவர். அங்கு இவர்களை கொத்தடிமைகள்போல் நடத்தி அதிக நேரம் வேலை வாங்கியுள்ளனர். அதோடு இவர்களுக்கு சரிவர உணவும் கிடைக்காமல் பசியும், பட்டினியுமாக வேலை பார்த்து வந்துள்ளனர். இதையறிந்த மாண்டியா மாவட்டத்தை சேர்ந்த அதிகாரிகள் அவர்கள் 21 பேரையும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீட்டனர். இவர்களில் 8 குழந்தைகளை மட்டும் மாண்டியா பகுதியில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தில் பாதுகாப்பாக தங்க வைத்தனர். மீதமுள்ள 13 பேரும் விழுப்புரம் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனின் அறிவுரைப்படி குழந்தைகள் நலக்குழுமத்தினர் மாண்டியா மாவட்டத்திற்கு சென்று அங்குள்ள அதிகாரிகளின் உதவியுடன் குழந்தைகள் நல காப்பகத்தில் இருந்த 8 குழந்தைகளையும் மீட்டு விழுப்புரம் அழைத்து வந்து அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் இவர்கள் 8 பேரையும் தொடர்ந்து பள்ளியில் படிக்க வைக்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.

Next Story