பிளஸ்-2 கணித தேர்வு கடினமாக இருந்தது மாணவ, மாணவிகள் பேட்டி


பிளஸ்-2 கணித தேர்வு கடினமாக இருந்தது மாணவ, மாணவிகள் பேட்டி
x
தினத்தந்தி 7 March 2019 10:45 PM GMT (Updated: 7 March 2019 8:00 PM GMT)

பிளஸ்-2 கணித தேர்வு கடினமாக இருந்தது என்று மாணவ-மாணவிகள் கூறினர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 1-ந் தேதி முதல் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று கணிதம், வணிகவியல், வேளாண்மை உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வு நடந்தது. இதில் கணித பாடத்தேர்வில் வினாக்கள் எளிமையாக இருந்ததாக பரவலாக மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்த தேர்வு குறித்து மாணவ, மாணவிகளின் கருத்து பின்வருமாறு:-

பள்ளி மாணவர் நூர்முகமது கூறுகையில், கணித தேர்வு கொஞ்சம் எளிமையாக தான் இருந்தது. 2 மற்றும் 3 மதிப்பெண் வினாக்கள் மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் 5 மதிப்பெண் வினாக்கள் மிகவும் எளிமையாக இருந்தது. கணித தேர்வு எழுதுவதற்கு போதுமான நேரம் இல்லை. இதனால் சில வினா-விடைகளை வேகமாக எழுதி முடிக்க வேண்டி இருந்தது என்றார்.

பள்ளி மாணவர் முகமது அனாஸ் கூறுகையில், கணித தேர்வில் அனைத்து வினாக்களும் எனக்கு எளிமையாக தான் இருந்தது. ஆனால் மற்ற மாணவர்களுக்கு அது கடினமாக கூட இருந்து இருக்கலாம். ஒரு மதிப்பெண் வினாக்கள் ஒரு சில மட்டும் புத்தகத்தின் உள் பகுதியில் இருந்து கேட்கப்பட்டன. ஆனால் அந்த வினாக்களுக்கும் நான் பதில் அளித்து விட்டேன். எனக்கு 100 மதிப்பெண்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

பள்ளி மாணவி தர்ஷினி கூறுகையில், கணித தேர்வு கொஞ்சம் கடினமாக தான் இருந்தது. 5 மதிப்பெண் வினாக்கள் மிகவும் எளிமையாக இருந்தன. 2 மற்றும் 3 மதிப்பெண் வினாக்கள் கொஞ்சம் கடினமாக இருந்தது. எனக்கு கணித தேர்வை எழுதி முடிக்க போதுமான நேரம் இல்லை. இதனால் சில வினாக் களுக்கு யோசிக்காமல் விரைவாக பதில் எழுத வேண்டிய கட்டாயத்திற்கு நான் தள்ளப்பட்டு உள்ளேன் என்றார்.

பள்ளி மாணவி சங்கீதா கூறுகையில், கணித தேர்வு எனக்கு எளிமையாக தான் இருந்தது. நான் எதிர்பார்த்த வினாக்கள் அதிக அளவில் வந்த தால் நான் மகிழ்ச்சியாக தேர்வு எழுதினேன். ஒரு மதிப்பெண் வினாக்கள் சில புத்தகத்தின் உள் பகுதியில் இருந்து கேட்கப்பட்டு இருந்தன. அந்த வினாக்கள் மட்டும் எனக்கு கடினமாக இருந்தது. எனக்கு 100 மதிப்பெண்கள் வரும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

பள்ளி மாணவி, ஐஸ்வர்யா கூறுகையில், கணித தேர்வு கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது. 5 மதிப்பெண் வினாக்கள் எளிமையாக இருந்தன. 2 மற்றும் 3 மதிப்பெண் வினாக்கள் மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் எனக்கு தேர்வு எழுத போதுமான நேரம் இல்லாததால், என்னால் ஒரு 5 மதிப்பெண் வினாவை எழுத முடியவில்லை. கூடுதலாக 15 நிமிடம் இருந்திருந்தால், அந்த வினாவையும் நான் எழுதி முடித்து இருப்பேன். என்னால் ஒரு வினாக்குரிய பதிலை எழுத முடியாததை நினைத்து வருத்தப்படுகிறேன் என்றார். 

Next Story