மருதமலை கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் தீத்தடுப்பு கோடு அமைக்காததால் காட்டுத்தீ பரவும் அபாயம் - உடனே நடவடிக்கை எடுக்க கோரிக்கை


மருதமலை கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் தீத்தடுப்பு கோடு அமைக்காததால் காட்டுத்தீ பரவும் அபாயம் - உடனே நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 9 March 2019 4:15 AM IST (Updated: 9 March 2019 1:26 AM IST)
t-max-icont-min-icon

மருதமலை அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் தீத்தடுப்பு கோடு அமைக்காததால் காட்டுத்தீ பரவும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை,

கோவை அருகே உள்ள மருதமலை முருகனின் 7-வது படை வீடாக போற்றப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வரும் பக்தர்கள் மருதமலை மீது உள்ள முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். பக்தர்களின் வசதிக்காக அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்ல படிக்கட்டு வசதியும், அதை ஒட்டி சாலை வசதியும் இருக்கிறது.

வனப்பகுதி வழியாக செல்லும் இந்த பாதையில் பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகளை வனத்துறை விதித்து உள்ளது. அடிவாரத்தில் இருந்து மலைக்கு 2½ கி.மீ. தூரம் செல்லும் இந்த சாலையில் காட்டு யானைகள், சிறுத்தைப்புலிகள், மான்கள் கடப்பதை பார்க்க முடியும். இந்த பாதை வனப்பகுதியில் இருந்தாலும் கோவில் நிர்வாகம் பராமரித்து வருவதாக தெரிகிறது.

அவர்கள் மலைப்பாதையை சரியாக பராமரிப்பது இல்லை என்று புகார் எழுந்துள்ளது. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளது. இதனால் செடி, புற்கள் காய்ந்து எளிதில் தீப்பற்றக் கூடிய அபாய நிலை இருக்கிறது. இதை தடுக்க வனத்துறை சார்பில் பல்வேறு இடங்களில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு உள்ளன.

ஆனால் பக்தர்கள் அதிகமாக செல்லும் மருதமலை மலைப்பாதையில் கோவில் நிர்வாகம் தான் தீத்தடுப்பு கோடுகள் அமைக்க வேண்டும் என்று வனத்துறையினர் கூறுகிறார்கள். ஆனால் கோவில் நிர்வாகம் சார்பில் இதுவரை தீத்தடுப்பு கோடு அமைக்கப்படவில்லை.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

கோவை கோட்ட வனப்பகுதியில் தீப்பிடித்து எளிதில் பரவுவதை தடுக்க 31 கி.மீ. தூரத்துக்கு தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கோடுகள் அமைப்பதால் தீ மேலும் பரவாமல் தடுத்து, உடனடியாக கட்டுப்படுத்தி விடலாம். குறிப்பாக வனப்பகுதியில் சாலை ஓரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்படும்.

மருதமலை வனப்பகுதி வழியாக கோவிலுக்கு செல்லும் மலைப்பாதை உள்ளது. எனவே அந்த பாதை யின் ஓரத்தில் தீத்தடுப்பு கோடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டு வந்தன. ஆனால் இந்த ஆண்டு இதுவரை அங்கு எவ்வித பணியும் செய்யப்பட வில்லை. ரோட்டின் இருபுறத்திலும் ஏராளமான புற்கள், செடிகள் காய்ந்து எளிதில் தீப்பிடிக்கும் நிலையில் இருக்கிறது.

பொதுவாக சாலை ஓரத்தில் 3 அடி அகலம் தீத்தடுப்பு கோடுகள் அமைத்தால் போதும். ஆனால் இந்த பாதையில் இருபுறத்திலும் 5 அடி தூரத்துக்கு அமைக்க வேண்டும். ஆனால் இன்னும் கோவில் நிர்வாகம் இந்த பணியை செய்யாமல் அலட்சியமாக உள்ளது.

இந்த மலைப்பாதை வழியாக தினமும் 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 1,500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில், யாராவது பீடி, சிகரெட் போன்றவற்றை அணைக்காமல் தூக்கி வீசினால் எளிதில் தீப்பிடித்து காட்டுத்தீ பரவி விடும்.

எனவே கோவில் நிர்வாகம் சார்பில் தீத்தடுப்பு கோடுகள் போடா விட்டாலும், வனத்துறை சார்பில் தீத்தடுப்பு கோடுகள் போட அறிவுறுத்தலாம். இரு துறைகளுக்கும் இடையே போட்டி நிலவுவதால், தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்படாமல் உள்ளது. இது போன்ற நிலையில் அசம்பாவிதம் ஏற்பட்டால் யார் பொறுப்பு ஏற்பது என்ற கேள்வி எழுந்து உள்ளது.

எனவே இருதுறை அதிகாரிகளும் உடனடி நடவடிக்கை எடுத்து மருதமலை மலைப்பாதையில் தீத்தடுப்பு கோடுகளை அமைக்க முன்வர வேண்டும். மலைப்பாதை வழியாக எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை பக்தர்கள் எடுத்துச்செல்ல அனுமதிக் கக்கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story