விருத்தாசலம் அருகே, ஒரேநாளில் 2 வீடுகளில் திருட்டு - கொள்ளையர்களை பிடிக்க முயன்ற விவசாயிக்கு கத்தி வெட்டு
விருத்தாசலம் அருகே ஒரே நாளில் 2 வீடுகளில் திருடுபோனது. இதில் தொடர்புடைய கொள்ளையர்களை பிடிக்க முயன்ற விவசாயிக்கு கத்தி வெட்டு விழுந்தது.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அருகே உள்ள சி.கீரனூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்(வயது 55). மளிகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கண்ணன் குடும்பத்தினர், கதவை திறந்து வைத்தபடி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது மர்மநபர்கள் வீட்டிற்குள் நுழைந்து, பீரோவை திறந்து அதில் இருந்த 2 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச்சென்றனர்.
இதேபோல் பக்கத்தில் உள்ள செல்வராஜ்(62) என்பவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், கொள்ளையடிக்க முயன்றனர். அந்தசமயத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை அழுதது. இதனால் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதேபோல அதே பகுதியை சேர்ந்த ஜெயராமன்(25) என்பவரது வீட்டில் 2 கிராம் நகையை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.
இதன் தொடர்ச்சியாக மர்மநபர்கள் 2 பேர், கொள்ளையடிப்பதற்காக அருகில் உள்ள ஏ.வல்லியம் கிராமத்தை சேர்ந்த பொய்யாமொழி(38) என்பவரது வீட்டிற்குள் நுழைந்தனர். அப்போது திடுக்கிட்டு எழுந்த பொய்யாமொழி, 2 பேரையும் பிடிக்க முயன்றார்.
உடனே 2 பேரும் சேர்ந்து, அவரை தாக்கி விட்டு, அதே கிராமத்தை சேர்ந்த விவசாயி சுப்பிரமணியன் என்பவரது மோட்டார் கொட்டகைக்கு சென்றனர். இதை பார்த்த சுப்பிரமணியன், நள்ளிரவில் இங்கு வந்தது ஏன்? என்று கேட்டார். அதற்கு 2 பேரும் சரியான பதில் கூறவில்லை. கொள்ளையர்கள் என்று தெரிந்து கொண்ட சுப்பிரமணியன், 2 பேரையும் பிடிக்க முயன்றார். அதில் ஒருவர், திடீரென சுப்பிரமணியனின் தலையில் கத்தியால் வெட்டினார். பின்னர் 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.
இதில் காயமடைந்த சுப்பிரமணியன், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக கருவேப்பிலங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story