தமிழகத்தில் அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும் மகளிர் தின பொதுக்கூட்டத்தில் வலியுறுத்தல்
தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும் என மகளிர் தின பொதுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் பஸ் நிலையம் அருகே ராமநாதபுரம் மாவட்ட மக்கள் அமைப்பு சார்பில் மகளிர் தினவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. தமிழக பெண்கள் கூட்டமைப்பின் துணை தலைவி ராமலட்சுமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் வக்கீல் காயத்திரி, பெண்கள் கூட்டமைப்பு நிர்வாகி கருத்தம்மாள், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முன்னாள் மாநில துணை தலைவி ராஜேசுவரி ஆகியோர் பேசினர். மீனவர் சங்க தலைவர் தேவதாஸ், மீனவர் வாழ்வுரிமை இயக்க தலைவர் தில்லைபாக்கியம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இதில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை அரசு தடுத்த நிறுத்திட வேண்டும், தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் நிரந்தரமாக மூட வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், விவசாயிகளின் விலை பொருட்களுக்கு அரசே விலை நிர்ணயம் செய்ய வேண்டும், மீனவர்களுக்கு டீசல் மானியம் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து பெண்களும் எழுந்து நின்று கோஷம் போட்டனர். கூட்டத்தில் வேர்க்கோடு ஆலய பங்கு தந்தை தேவசகாயம், ஆரோக்கிய புனிதா, மாவட்ட மக்கள் அமைப்பு பொருளாளர் ரூபி, செயலாளர் மேரியூஜின் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தை தொடர்ந்து பெண்களின் கோலாட்டம், கும்மியாட்டம் நடந்தன.
மேலும் திருவாடானை தாலுகா ஒரிக்கோட்டை ஹோலிகிராஸ் கான்வென்ட் ஸ்வெட் தொண்டு நிறுவனம் பெண்கள் அமைப்பு சார்பில் உலக மகளிர் தினவிழா நடைபெற்றது. சிவகங்கை மறை மாவட்ட ஆயர் சூசைமாணிக்கம் தலைமை தாங்கினார். லீமாரோஸ் வரவேற்றார். அர்ச்சனா ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் அரசு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ–மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஒரிக்கோட்டை பங்குத்தந்தை புஷ்பராஜ், திணையத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சகாயராணி ஆகியோர் வாழ்த்தி பேசினர். பின்னர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற சுய உதவிக்குழு பெண்களுக்கு சிவகங்கை மறை மாவட்ட ஆயர் சூசைமாணிக்கம் பரிசு வழங்கினார். இதில் திருவாடானை தாலுகாவில் வறட்சி காரணமாக நீர்நிலைகள் வற்றிப்போய் விட்டதால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பெண்கள் தினமும் குடிநீருக்காக அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் திருவாடானை தாலுகாவில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் பின்னர் மகளிர் சுய உதவி குழுவின் சார்பில் பட்டிமன்றம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முடிவில் ரேவதி நன்றி கூறினார்.