அ.தி.மு.க. கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்பு மொரப்பூரில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி
அ.தி.மு.க. கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்பு உள்ளது என்று மொரப்பூரில் அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
தர்மபுரி,
சென்னையிலிருந்து பாலக்காட்டிற்கும், மறுமார்க்கத்தில் பாலக்காட்டில் இருந்து–சென்னைக்கும் செல்லும் சென்னை–பாலக்காடு, பாலக்காடு–சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில்களை தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்தநிலையில் சென்னை–பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலை மொரப்பூரிலும், பெங்களூரு–எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயிலை பாலக்கோட்டிலும் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் மத்திய ரெயில்வே மந்திரி பியூஸ்கோயலிடம் கோரிக்கை விடுத்தார்.
இந்த கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரெயில்வே மந்திரி அறிவித்தார். இதன்படி நேற்று சென்னை–பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் மொரப்பூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லப்பட்டது. இந்த ரெயிலை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேற்று அதிகாலை 3 மணிக்கு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதுதொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
தர்மபுரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் இரவு நேரங்களில் சென்னை செல்லவும், சென்னையிலிருந்து வரவும் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலை மொரப்பூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ரெயிலுக்கு செல்ல ஏதுவாக தர்மபுரி மற்றும் அரூரில் இருந்து மொரப்பூருக்கு போதிய பஸ் வசதியையும் தமிழக அரசு செய்து கொடுக்கும்.
அ.தி.மு,க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணிக்கு மேலும் வலிமை சேர்க்கும் வகையில் சில கட்சிகள் இணைய உள்ளன. அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைய வாய்ப்பு உள்ளது. ஓரிருநாட்கள் பொறுத்திருந்தால் கூட்டணி குறித்த தெளிவான நிலை ஏற்படும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
அப்போது மொரப்பூர் முன்னாள் ஒன்றிய செயலாளர் மதிவாணன், கூட்டுறவு சங்க தலைவர்கள் பொன்னுவேல், செல்வராஜ், செல்வம், மூர்த்தி, ஜெகந்நாதன், சிங்காரம், தனபால் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் கலந்து கொண்டனர்.