அய்யன்கொல்லி அருகே சிறுத்தைப்புலிகள் கடித்து 2 பசு மாடுகள் சாவு வனத்துறையினர் விசாரணை


அய்யன்கொல்லி அருகே சிறுத்தைப்புலிகள் கடித்து 2 பசு மாடுகள் சாவு வனத்துறையினர் விசாரணை
x
தினத்தந்தி 9 March 2019 10:45 PM GMT (Updated: 9 March 2019 4:52 PM GMT)

அய்யன்கொல்லி அருகே சிறுத்தைப்புலிகள் கடித்து 2 பசு மாடுகள் உயிரிழந்தன. இது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பந்தலூர்,

பந்தலூர் தாலுகா பகுதியில் காட்டுயானைகளுக்கு அடுத்தபடியாக சிறுத்தைப்புலிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. கால்நடைகளை கடித்து கொன்று வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் மிகுந்த நஷ்டத்துக்கு ஆளாகி வருகின்றனர். அய்யன்கொல்லி அருகே சன்னக்கொல்லி பகுதியை சேர்ந்தவர் பார்வதி. இவர் தனது வீட்டில் சில பசு மாடுகளை வளர்த்து வருகிறார்.

நேற்று காலை வழக்கம்போல் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டார். அப்போது மதியம் 12 மணிக்கு மாடுகளின் அலறல் சத்தம் கேட்டது. இதனால் பார்வதி உள்பட அக்கம்பக்கத்தினர் மாடுகள் நின்றிருந்த பகுதிக்கு ஓடினர். அப்போது 3 பசு மாடுகளை சிறுத்தைப்புலிகள் கடித்து இருப்பது தெரியவந்தது. இதில் 3 வயதான 2 பசு மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.

1½ வயதான மற்றொரு பசு மாடு பலத்த காயங்களுடன் அப்பகுதியில் கிடந்தது. மேலும் மாடுகள் நின்றிருந்த இடங்களில் சிறுத்தைப்புலிகள் வந்து சென்றதற்கான கால் தடங்கள் பதிவாகி இருந்தன. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதன்பேரில் பிதிர்காடு வனச்சரகர் மனோகரன் தலைமையில் வன காப்பாளர்கள் ஹாலன், ராமச்சந்திரன் உள்ளிட்ட வனத்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து கால்நடை டாக்டர் ரேவதி வரவழைக்கப்பட்டு, உயிரிழந்த பசு மாடுகளின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. அப்போது சிறுத்தைப்புலிகள் கடித்து பசு மாடுகள் இறந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் பலத்த காயம் அடைந்த மற்றொரு பசு மாட்டுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுத்தைப்புலிகள் நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

மேலும் பசு மாடுகள் இறந்து விட்டதால் நஷ்டத்துக்கு ஆளாகி உள்ளதாக பார்வதி வனத்துறையினரிடம் முறையிட்டார். அப்போது உரிய ஆவணங்களை சமர்ப்பித்த உடன் இழப்பீடு தொகை வழங்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். இதனிடையே சிறுத்தைப்புலிகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறைக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story