கோவை மாவட்டத்தில், 3¼ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்
கோவை மாவட்டத்தில் 3¼ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
கோவை,
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நேற்று நடைபெற்றது. இதில், கோவை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 1,202 மையங்கள், நகர்புறங்களில் 379 மையங்கள் என மொத்தம் 1581 மையங்களில் நேற்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. மேலும் ரெயில் நிலையம், பஸ் நிலையங்களில் 34 மையங்களும், 24 சிறப்பு நடமாடும் மையங்களும் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த பணியில் 6,324 பணியாளர்கள் ஈடுபட்டனர்.
கோவை அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து வழங்கி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
இந்தியாவுக்கே முன்மாதிரியாக தமிழகத்தில் பல்வேறு சீர்மிகு திட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தி வருகிறார். கோவை மாவட்டத்தில் 5 வயதுக்கு உட்பட்ட 3 லட்சத்து 33 ஆயிரத்து 391 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அதில் 3 லட்சத்து 24 ஆயிரத்து 378 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு உள்ளது.
அரசால் வழங்கப்படும் இந்த போலியோ சொட்டு மருந்து மிகவும் தரமானது. உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டது. மிகவும் பாதுகாப்பானது. எனவே பொதுமக்கள் தங்கள் 5 வயது குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ச்சுனன், கலெக்டர் ராஜாமணி, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், சுகாதாரத்துறை இணை இயக்குனர் கிருஷ்ணா, துணை இயக்குனர் பானுமதி, அரசு ஆஸ்பத்திரி டீன் அசோகன், இருப்பிட மருத்துவ அதிகாரி சவுந்திரவேல், ஆதிநாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவை மாநகராட்சி சீதாலட்சுமி நகர்நல மையத்தில் மாநகராட்சி தனி அதிகாரி ஷ்ரவன்குமார் ஜடாவத், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். துணை ஆணையர் பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தார். மாநகராட்சி பகுதியில் மொத்தம் 1 லட்சத்து 60 ஆயிரத்து 781 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
இதற்காக மாநகராட்சி பகுதியில் 339 முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தன. மாநகராட்சி நகர்நல மையங்கள், மருந்தகங்கள், சத்துணவு கூடங்கள், மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
குழந்தைகளை பெற்றோர்கள் ஆர்வமுடன் தூக்கி வந்து போலியோ சொட்டு மருந்து கொடுத்து சென்றனர். அந்த குழந்தைகளின் கை விரலில் அடையாள மை வைக்கப்பட்டது. இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும் போது, கோவை மாவட்டத்தில் நாளை (இன்று) முதல் 12-ந் தேதி வரை வீடு வீடாக சென்று ஆய்வு செய்து விடுபட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க உள்ளனர். வருகிற 13-ந் தேதி வரை பஸ் நிலையங்கள், சோதனைச்சாவடிகளில் சிறப்பு குழுவினர் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபடுவார்கள், என்றனர்.
Related Tags :
Next Story