தம்மம்பட்டியில் 680 காளைகள் சீறிப்பாய்ந்த ஜல்லிக்கட்டு 35 மாடுபிடி வீரர்கள் காயம்


தம்மம்பட்டியில் 680 காளைகள் சீறிப்பாய்ந்த ஜல்லிக்கட்டு 35 மாடுபிடி வீரர்கள் காயம்
x
தினத்தந்தி 10 March 2019 9:45 PM GMT (Updated: 10 March 2019 8:25 PM GMT)

தம்மம்பட்டியில் நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. இதில் 680 காளைகள் சீறிப்பாய்ந்து பங்கேற்றன. 35 மாடுபிடி வீரர்கள் காயம் அடைந்தனர்.

தம்மம்பட்டி, 

சேலம் மாவட்டம், தம்மம்பட்டியில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு தம்மம்பட்டி பேரூராட்சி தண்ணீர்பந்தல் பகுதியில் நேற்று நடந்தது.

இதையொட்டி செந்தாரப்பட்டி, கெங்கவல்லி, பெரம்பலூர், லால்குடி, மதுரை, அலங்காநல்லூர், திருச்சி, துறையூர், ராசிபுரம், கள்ளக்குறிச்சி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 750 காளைகள் கொண்டு வரப்பட்டு இருந்தன. மேலும், காளைகள் கொண்டு வரப்பட்ட ஊர்களில் இருந்து 450 மாடுபிடி வீரர்களும் இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்க பதிவு செய்து நேற்று காலையில் அங்கு வந்தனர்.

இதையடுத்து காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ குழுவினர் பரிசோதனை நடத்தினர். பின்னர் வாடிவாசலில் குழுமி இருந்த மாடுபிடி வீரர்களுக்கு ஆத்தூர் உதவி கலெக்டர் அபுகாசிம் உறுதிமொழியை வாசிக்க அவர்கள் பின்தொடர்ந்து கூறி ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து வாடிவாசல் வழியாக கோவில் மாடு விடப்பட்டது. அதை மரபு படி யாரும் பிடிக்கவில்லை.

தொடர்ந்து கெங்கவல்லி எம்.எல்.ஏ. மருதமுத்து, ஆத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. சின்னமுத்து ஆகியோர் கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தனர். இதையடுத்து ஒவ்வொரு காளைகளாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டு களம் இறக்கப்பட்டன. இதில் மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் ஆக்ரோஷமாக தப்பிய காளைகள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. இதேபோல் அடங்க மறுத்த காளைகளுடன் மல்லுக்கட்டிய வீரர்கள் அவற்றை அடக்கிய காட்சியையும் காண முடிந்தது.

காளைகளை அடக்கிய மாடு பிடி வீரர்களுக்கு சைக்கிள், மோட்டார் சைக்கிள், சில்வர் குடங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. இதேபோல் மாடுபிடிவீரர்களிடம் சிக்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

அதே நேரத்தில் மாலை 4.15 மணியளவில் ஜல்லிக்கட்டு நிறைவுபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அப்போது 680 காளைகள் மட்டுமே வாடிவாசல் வழியாக களம் இறக்கப்பட்டு இருந்தன. மீதமுள்ள காளைகளுக்கு நேரமின்மை காரணமாக ஆறுதல் பரிசு வழங்கப்படுவதாக விழாக்குழுவினர் அறிவித்தனர். இதனால் அந்த காளைகளின் உரிமையாளர்கள் விழாக்குழுவினருடன் தங்கள் காளைகளையும் களம் இறக்க கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் மற்றும் அதிகாரிகள் சமாதானம் பேசியதை அடுத்து, அந்த காளைகள் அனைத்தும் களம் காணாமல் ஆறுதல் பரிசுடன் திரும்ப அழைத்து செல்லப்பட்டன.

இந்த ஜல்லிக்கட்டில் 35 மாடுபிடி வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் படுகாயம் அடைந்த தம்மம்பட்டி பேரூராட்சி 2-வது வார்டு பகுதியை சேர்ந்த சவுந்தரபாண்டியன் என்ற மாடுபிடி வீரர் தொடை பகுதியில் படுகாயம் அடைந்தார்.

அவர் உடனடியாக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் காயம் அடைந்த 2 வீரர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்ட தம்மம்பட்டியை சேர்ந்த சிவாஜி என்ற கார்த்திகேயனுக்கு மோட்டார் சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது.

Next Story