நிலப்பிரச்சினையில் 6 வீடுகள் சூறை பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிப்பு


நிலப்பிரச்சினையில் 6 வீடுகள் சூறை பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிப்பு
x
தினத்தந்தி 12 March 2019 4:30 AM IST (Updated: 12 March 2019 1:06 AM IST)
t-max-icont-min-icon

நச்சலூர் அருகே நிலப்பிரச்சினையில் 6 வீடுகள் சூறையாடப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நச்சலூர்,

கரூர் மாவட்டம் நச்சலூர் அருகே உள்ள நங்கவரம் காமராஜ் நகரில் ஆதிதிராவிடர்கள் சுமார் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பு நங்கவரம் பண்ணையில் கூலி வேலை செய்த ஆதி திராவிடர்களுக்கு அப்போதைய பண்ணை அய்யர் என்பவர் குறிப்பிட்ட நிலத்தை தானமாக வழங்கினார். இந்நிலையில், அந்த நிலம் தனக்கு சொந்தமானது என்று, அதே பகுதியில் உள்ள தமிழ்சோலையை சேர்ந்த மலையாளம் மனைவி பெரியம்மாள்(வயது 65) கூறியதால் இரு தரப்பினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக கோர்ட்டில் வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நேற்று நிலம் சம்பந்தமாக பெரியம்மாள் தரப்பினர் காமராஜ் நகருக்கு சென்று, குறிப்பிட்ட நிலத்தில் இருக்கும் அனைவரும் வீட்டை காலி செய்ய வேண்டும் என கூறி 6-க்கும் மேற்பட்ட வீடுகளை சூறையாடியும், ஒரு குடிசை வீட்டிற்கு தீ வைத்து எரித்துவிட்டும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

இதனால் பாதிக்கப்பட்ட தரப்பினர் நங்கவரம்-பெருகமணி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த குளித்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பாதிக்கப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட வீடுகளை சூறையாடியவர்களை கைது செய்யும் வரை மறியலை கைவிட மாட்டோம் என தெரிவித்தனர்.

இதையடுத்து பெரியம்மாள் தரப்பினை சேர்ந்த லெட்சுமணன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் இதில் தொடர்புடைய மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். சம்பவம் நடந்த பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் அங்கு குளித்தலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story